செய்திகள்
கிருஷ்ணா தண்ணீர்

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் இன்று திறக்க வாய்ப்பு

Published On 2019-09-23 09:40 GMT   |   Update On 2019-09-23 09:40 GMT
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு இன்று தண்ணீர் இன்று திறக்கப்பட்டால் தமிழகத்தின் எல்லையான ஊத்துக்கோட்டை ‘ஜீரோ பாய்ண்ட்’டுக்கு ஒரு வாரத்தில் வந்தடையும்.
ஊத்துக்கோட்டை:

கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு வருடந்தோறும் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்தது. இதனால் கடந்த 2 மாதத்துக்கு முன்பே சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டு விட்டது.

சென்னை குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து கோரிக்கை விடுத்து இருந்தனர்.

அப்போது கிருஷ்ணா நீர் திறக்கப்படும் என்று ஜெகன்மோகன் ரெட்டி உறுதி அளித்தார்.

கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்ததால் 10 டி.எம்.சி.யை எட்டியதும் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று ஆந்திர மாநில நீர்வளத்துறையினர் கூறி இருந்தனர். இதைத் தொடர்ந்து சோமசீலா அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.

இதனால் இந்த மாத இறுதியில் கிருஷ்ணா நீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஸ்ரீசைலம் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக சோமசீலா அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சோமசீலா அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக கண்டலேறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது அணையில் 11 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் உள்ளது. நேற்று வினாடிக்கு 9,447 கனஅடி நீர் வந்தது.

எனவே கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு இன்று தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணா தண்ணீர் இன்று திறக்கப்பட்டால் 152 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தமிழகத்தின் எல்லையான ஊத்துக்கோட்டை ‘ஜீரோ பாய்ண்ட்’டுக்கு ஒரு வாரத்தில் வந்தடையும்.

அங்கிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு தண்ணீர் செல்லும். தினமும் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் கூடுதலாக கிடைக்கும் பட்சத்தில் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.


Tags:    

Similar News