செய்திகள்
மின்னல்

வெங்கல் அருகே மின்னல் தாக்கி பெண் பலி

Published On 2019-09-23 08:14 GMT   |   Update On 2019-09-23 08:14 GMT
வெங்கல் அருகே மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே பேரத்தூர் கிராமம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை இடிமின்னலுடன் இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

மழையில் நனைந்தபடி, பேரத்தூர் கிராமத்தில் வயல்வெளியில் கூலித் தொழிலாளிகள் 15 பேர் நாற்று நடும் பணியை செய்து கொண்டிருந்தனர். அப்போது பலத்த சத்தத்துடன் இடி-மின்னல் வயல் வெளியை தாக்கியது.

இதில் பேரத்தூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர்களான அன்னபூரணி (45), முருகன் (35), உஷா(36), கலா (38), அற்புதம்(44), நாகம்மாள் (36), சின்ன பொண்ணு (45) ஆகியோர் படுகாயமடைந்தனர். அனைவரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அன்னபூரணி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் இழந்தார். முருகன் மற்றும் உஷா ஆகிய இருவரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கலா, அற்புதம், நாகம்மாள், சின்னப்பொண்ணு ஆகிய 4 பெண்களும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வெங்கல் போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்தனர். மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருபவர்களை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இடி - மின்னல் ஏற்படும் போது, பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைய வேண்டும்.

ஏரி, ஆறு போன்ற நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இடி- மின்னல் தாக்கியதில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News