செய்திகள்
கைத்தறி நெசவாளர்கள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கைத்தறி நெசவாளர்களுக்கு விருது-சான்றிதழ்: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

Published On 2019-09-21 09:29 GMT   |   Update On 2019-09-21 09:44 GMT
கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகளுக்குரிய பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.
சென்னை:

நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பட்டு ரகம் உற்பத்தி செய்யும் நெசவாளருக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பருத்தி ரகம் உற்பத்தி செய்யும் நெசவாளருக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலுள்ள வடிவமைப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறந்த வடிவமைப்பாளர்களை தேர்வு செய்து முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2019- 20-ம் ஆண்டிற்கு மாநில அளவில் அதிக உற்பத்தியும், விற்பனையும் பெற்றுத்தந்த பட்டு ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளருக்கான முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சேலம் சரகம், ஜே.ஒ. கொண்டலாம்பட்டி பருத்தி மற்றும் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் சுப்ரமணிக்கும், பருத்தி ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளருக்கான முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பரமக்குடி சரகம், கலைமகள் பருத்தி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் பாண்டுரங்கனுக்கும், இரண்டாம் பரிசாக தலா 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை பாபு (பட்டு ரகம்) மற்றும் மல்லிகா (பருத்தி ரகம்) ஆகியோருக்கும், மூன்றாம் பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை சரவணன் (பட்டு ரகம்) மற்றும் ராதாமணி (பருத்தி ரகம்) ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த வடிவமைப்பாளருக்கான முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை கும்பகோணம் சரகம், திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்க வடிவமைப்பாளர் கார்த்திகேயனுக்கும், சிறந்த வடிவமைப்பு மற்றும் தரத்துடன் கூடிய கைத்தறி ரகங்களை நெசவு செய்தமைக்காக, 20 திறன்மிகு நெசவாளர்களுக்கு முதல் பரிசாக தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் என மொத்தம் 27 கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகளுக்குரிய பரிசுத் தொகையான 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் திருச்செங்கோடு சரக உதவி இயக்குநர் அலுவலகக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அண்ணா கூட்டுறவு நூற்பாலை, பாரதி கூட்டுறவு நூற்பாலை, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை ஆகிய நூற்பாலைகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான நிரந்தர பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தை சார்ந்த 5 வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில், ஓட்டுநர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Tags:    

Similar News