செய்திகள்
கோப்பு படம்

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்புவதை தடுக்க விரைவில் புதிய சட்டம் - ஐகோர்ட்டில், மத்திய அரசு தகவல்

Published On 2019-09-21 01:08 GMT   |   Update On 2019-09-21 01:08 GMT
சமூக வலைத்தளங்களை கண்காணித்து, தவறான தகவல்களை பரப்பாமல் தடுக்க மத்திய அரசு விரைவில் புதிய சட்டத்தை இயற்ற உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில், மத்திய அரசு வக்கீல் தெரிவித்தார்.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘சமூக வலைத்தளங்களில் ஏராளமான அவதூறு செய்திகள், வதந்திகள் பரப்பப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சைபர் குற்றங்களை தடுக்கவும் சமூக வலைத்தள கணக்குகளுடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர், சமூக வலைத்தள நிறுவனங்கள் சார்பில் வக்கீல் கள் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “பொதுமக்கள் தங்களின் கருத்துகளை பகிர ஒரு தளம் அமைத்துக்கொடுத்துவிட்டு, அதில் பரப்பப்படும் தவறான தகவல்கள், வதந்திகள் ஆகியவற்றுக்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம் கூறுவதை ஏற்க முடியாது. அந்த நிறுவனத்துக்கு உலகளவில் ஒரு சட்டம் இருந்தாலும், இந்தியாவுக்குள் வரும்போது அந்நிறுவனம் இந்திய நாட்டின் சட்டத்தை பின்பற்ற வேண்டும். ஏனெனில், சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி களால் பலருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே காட்சி ஊடகங்களை கண்காணிக்கவும், அவற்றை கட்டுப்படுத்தவும் தனியாக அமைப்புகள் இருப்பதைப்போல, சமூக வலைத்தளங்களை கட்டுப் படுத்த எந்த அமைப்புகளும் இல்லை” என கருத்து தெரிவித்தனர்.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், “இந்தியாவில் சமூக வலைத் தளங்களை கண்காணித்து, தவறான தகவல்களை பரப்பாமல் தடுக்க மத்திய அரசு விரைவில் புதிய சட்டத்தை இயற்ற உள்ளது. அதற்காக அரசின் இறுதிமுடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “சமூக வலைத் தளங்களுக்கான குறைதீர் ஆணையம் மற்றும் நிர்வாகியை நியமிக்கும் விஷயத்தில் முகநூல் மற்றும் ‘டுவிட்டர்’ நிறுவனங்கள் தமிழக அரசுக்கு போதிய ஒத்துழைப்பை அளித்து வருகின்றன. ஆனால் ‘வாட்ஸ்-ஆப்’ நிறுவனம் எந்த ஒத்துழைப்பும் வழங்குவதில்லை” என்று கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News