செய்திகள்
கே.எஸ்.அழகிரி

பேனர் விவகாரத்தில் நடிகர் விஜய் கருத்தை வரவேற்கிறேன்- கே.எஸ்.அழகிரி

Published On 2019-09-21 00:24 GMT   |   Update On 2019-09-21 00:24 GMT
பேனர் விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் தெரிவித்த கருத்தை வரவேற்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
சென்னை:

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக மகளிர் காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. தமிழக மகளிர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜான்சி ராணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சவுமியா ரெட்டி, பொதுச்செயலாளர் அப்சரா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தேசிய செயலாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மூத்த தலைவர் குமரி அனந்தன், விஜயதாரணி எம்.எல்.ஏ., மகளிர் காங்கிரஸ் தேசிய செயலாளர்கள் ஹசீனா சையத், வக்கீல் சுதா மற்றும் தனித்தங்கம் உள்பட ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதேபோல் தமிழக காங்கிரஸ் சேவாதள மாநில தலைவர் குங்பூ விஜயன் தலைமையில் சேவாதள மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் சேவாதள தலைவர் லால்ஜி தேசாய் முன்னிலை வகித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பொதுச்செயலாளர்கள் ஜி.கே.தாஸ், பொன் கிருஷ்ணமூர்த்தி உள்பட ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டங்களுக்கு பிறகு கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்டம் பேரழிவிற்கு கிரீடம் வைத்தது போல் உள்ளது. 45 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறது. மத்திய அரசு லாரி உரிமையாளர்களை அழைத்து பேச வேண்டும்.

சுபஸ்ரீ மீது பேனர் விழுந்த விவகாரத்தில், ‘யாரை கைது செய்ய வேண்டுமோ, அவர்களை விட்டு விட்டு போஸ்டர் பிரிண்ட் செய்த கடைக்காரன் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள்’ என நடிகர் விஜய் கருத்து தெரிவித்து உள்ளார். இதற்காக நடிகர் விஜய்யை வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். பொது இடங்களில் பேனர் வைக்க வேண்டாம் என்று நாங்கள் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

அந்த காலத்தில் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் மிட்டாய் விற்பார்கள். தற்போது குட்கா விற்கிறார்கள். இது சமூகம் சீரழிவை நோக்கி செல்கிறது என்பதை காட்டுகிறது. எனவே அந்த நிலையை மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News