செய்திகள்
ஜிகே வாசன்

த.மா.கா.வினர் கட்-அவுட் பேனர்கள் வைக்கக்கூடாது - ஜி.கே.வாசன் உத்தரவு

Published On 2019-09-20 09:26 GMT   |   Update On 2019-09-20 09:26 GMT
த.மா.கா.வினர் கட்-அவுட் பேனர்களை வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

த.மா.கா. மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் ஜி.கே.வாசன் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்திற்குப்பின் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கட்சி பணிகளை விரிவுபடுத்துவது உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களை கண்டறிவது பற்றி விவாதிக்கப்பட்டது.

முக்கியமாக பேனர்கள் வைப்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்தும் ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று த.மா.கா.வினர் கட்-அவுட் பேனர்களை வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தி விவகாரத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் தமிழ் தாய்மொழியாகவும் ஆங்கிலம் தொடர்பு மொழியாகவும் இருக்கிறது. மூன்றாவது மொழியாக இந்தி உள்பட அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற மொழிகளை கற்கலாம் என்பது த.மா.காவின் நிலைப்பாடு. இந்தி திணிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

தமிழக அரசும் ஏற்கவில்லை. இந்தி திணிக்கப்படாது என்று மத்திய அரசும் விளக்கம் அளித்து விட்டது. எனவே எதிர்க்கட்சிகள் மொழிப் பிரச்சினையை வைத்து அரசியல் ஆதாயம் தேடக்கூடாது.

கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஞானதேசிகன், கோவை தங்கம், விடியல் சேகர், ஜவகர் பாபு, சக்தி வடிவேல் மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், அண்ணாநகர், ராம்குமார், விக்டரி மோகன், அருண் குமார், தாம்பரம் மணி தலைமை நிலையச் செயலாளர்கள் ஜி.ஆர். வெங்கடேஷ், டி.என். அசோகன், டி.எம்.பிரபாகர், சீனிவாசன் உள்பட பலர் வந்து கொண்டனர்.
Tags:    

Similar News