செய்திகள்
கோப்பு படம்

திண்டுக்கல்லில் கல்லூரி அதிபர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை - ரூ.2.30 லட்சத்தையும் அள்ளிச் சென்றனர்

Published On 2019-09-19 11:34 GMT   |   Update On 2019-09-19 11:34 GMT
திண்டுக்கல்லில் கல்லூரி அதிபர் வீட்டில் 50 பவுன் நகை மற்றும் ரூ.2.30 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் எம்.வி.எம். நகர் 2-வது குறுக்குத் தெரு பகுதியில் வசித்து வருபவர் கன்னியப்பன். இவர் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது வேடசந்தூர் ரோட்டில் எம்.பி.ஏ. கல்லூரி நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவரும் வெளி நாட்டில் வசித்து வருகின்றனர்.

தினசரி கல்லூரிக்கு கன்னியப்பனும் அவரது மனைவியும் சென்று விட்டு இரவில் வீடு திரும்புவது வழக்கம். சில சமயங்களில் கல்லூரியிலேயே தங்கி விடுவார்கள். அதன்படி நேற்று இரவு கல்லூரியிலேயே அவர்கள் தங்கியுள்ளனர்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த 2 பீரோக்களையும் உடைத்து அதில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.2.30 லட்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு பின்புற வாசல் வழியாக தப்பிச் சென்றனர்.

இன்று அதிகாலை அவர்களது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கன்னியப்பனுக்கு போன் செய்தனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரும் வீட்டுக்கு வந்து பார்த்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து நகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் கன்னியப்பன் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. கைரேகை தடயவியல் நிபுணர்கள் வந்து முக்கிய தடயங்களை பதிவு செய்தனர். முக்கிய பிரமுகர்கள் வசித்து வரும் இப்பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் - கரூர் சாலையில் எம்.எவி.எம். நகருக்கு செல்லும் பகுதியில் சுரங்கப்பாதை பணி கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 50 சதவீத பணிகள் கூட நிறைவு பெறவில்லை. இந்த பணியினால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.

எனவே இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியும் மேற்கொள்வது கிடையாது. மக்கள் நடமாட்டமும் குறைவாகவே இருக்கும். இதனை பயன்படுத்தியே கொள்ளையர்கள் தாங்கள் வரும் பாதை மற்றும் தப்பி செல்லும் பகுதிகளை திட்டமிட்டு கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

ஏற்கனவே ஆர்.எம்.காலனி பகுதியில் நடந்து செல்லும் பெண்களிடம் அடிக்கடி நகை பறிப்பு சம்பவம் நடந்து வருகிறது. தற்போது அதனை ஒட்டியுள்ள பகுதியில் மிகப்பெரிய அளவில் கொள்ளை நடந்துள்ளது.
Tags:    

Similar News