செய்திகள்
லாரிகள் வேலைநிறுத்தம்

குமரி மாவட்டத்தில் 3500 லாரிகள் இன்று ஓடவில்லை - ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு

Published On 2019-09-19 09:32 GMT   |   Update On 2019-09-19 09:32 GMT
லாரிகள் ஸ்டிரைக் காரணமாக குமரி மாவட்டத்தில் 3500 லாரிகள் இயங்கவில்லை. இன்று ஒருநாள் மட்டும் ரூ.2 கோடிக்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்:

மத்திய அரசின் புதிய சாலை வாகன சட்டத்தின் மூலம் லாரிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகை பல மடங்கு அதிகரித்து இருப்பதை கண்டித்தும், சுங்கச்சாவடி கட்டணங்களை குறைக்க வேண்டும், சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு உள்ளனர்.

லாரிகள் ஸ்டிரைக் காரணமாக குமரி மாவட்டத்திலும் லாரிகள் ஓடவில்லை. குமரி மாவட்டத்தில் லாரிகள், டெம்போ லாரிகள் உள்பட மொத்தம் 3500 உள்ளது. போராட்டம் காரணமாக இந்த லாரிகள் இன்று இயங்கவில்லை.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும் என்று அறிவித்து உள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் சங்கம், நாகர்கோவில் உள்ளூர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளதால் லாரிகள் முழுமையாக இயங்காத நிலை ஏற்பட்டு உள்ளது.

குமரி மாவட்டத்தில் இருந்து அதிக அளவு தேங்காய் வெளி மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும். லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தேங்காய்களை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் பணி முற்றிலுமாக முடங்கி உள்ளது.

அதேப்போல வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு வரக்கூடிய காய்கறிகள், வெங்காயம், வத்தல் போன்ற பொருட்கள் லாரிகள் மூலம் குமரி மாவட்டத்திற்கு தினமும் கொண்டு வரப்படும். அந்த லாரிகளும் இன்று குமரி மாவட்டத்திற்கு வரவில்லை. அதேப்போல குமரி மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு வர வேண்டிய காய்கறிகளும் இன்று வரவில்லை. இதுபோன்ற வர்த்தக முடக்கம் காரணமாக இன்று ஒருநாள் மட்டும் ரூ.2 கோடிக்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவிலில் நாகராஜா கோவில் மைதானம் உள்பட பல இடங்களில் லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அதேசமயம் டேங்கர் லாரிகள், பால் லாரிகள், ரே‌ஷன் பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள் உள்பட அத்தியாவசிய பணிக்கான லாரிகள் வழக்கம் போல இயங்கின.

Tags:    

Similar News