செய்திகள்
கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது

திருவள்ளூரில் ஒரே நாளில் 22 செ.மீட்டர் மழை - கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்

Published On 2019-09-19 08:16 GMT   |   Update On 2019-09-19 08:16 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 22 செ.மீட்டர் மழையும், பூண்டியில் 20 செ.மீட்டரும் கொட்டி தீர்த்துள்ளது.
திருவள்ளூர்:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கிய மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

திருவள்ளூரில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பலத்த மழை காரணமாக மணவாளநகர், கபிலர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புப் பகுதியில் கழிவு நீருடன் மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. ராஜாஜிபுரம் சிவா விஷ்ணுகோவில் தெருவில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்ததால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதேபோல் கடம்பத்தூர் ஒன்றியம் கன்னியம்மாள் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை மழை நீர்சூழ்ந்தது. இதனால் அங்கு வசிப்பவர்கள் தவித்து வருகின்றனர்.

திருவள்ளூர் புங்கத்தூர் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மாணவர்கள் உள்ளே செல்லாமல் அச்சத்துடன் வெளியே நின்றிருந்தனர். தொடர்மழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இறையூர்- ராஜபாளையம் இடையே கொசஸ்தலை ஆற்றின் நடுவில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் பத்துக்கும் மேற்பட்ட கிராமத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

பொன்னேரி - பழவேற்காடு நெடுஞ்சாலை திருவாயாபாடி ரெயில்வே பாலத்தின் கீழ் தொடர் மழையால் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வந்த பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார் உத்தரவின்படி மின் மோட்டார் மூலம் மழை நீர் அகற்றப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 22 செ.மீட்டர் மழையும், பூண்டியில் 20 செ.மீட்டரும் கொட்டி தீர்த்துள்ளது.

மாமல்லபுரம் பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குறைவான மீனவர்களே கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

மீனவர்களின் வலைகளில் அதிகளவில் மீன்கள் சிக்கவில்லை வீட்டு தேவைக்கு மட்டுமே மீன்கள் கிடைத்தது. மீன்கள் சிக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags:    

Similar News