செய்திகள்
மாணவர்கள்

பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு முறையில் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

Published On 2019-09-19 03:29 GMT   |   Update On 2019-09-19 03:29 GMT
பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு முறையில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றம் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 1200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின்பு, இந்த நடைமுறையை தமிழக அரசு மாற்றி 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தி வருகிறது.

தற்போது வரை இந்த நடைமுறை அமலில் உள்ளது. இந்தநிலையில் பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுக்கான மதிப்பெண் முறையில் தமிழக அரசு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.



இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்பு மற்றும் விதிகள் வடிவமைப்பிற்கான வல்லுனர் குழுவிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக தற்போது நடைமுறையில் உள்ள பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி மாணவர்கள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஏதுவாகவும், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் தற்போது நடைமுறையில் உள்ள முதன்மை பாடத்தொகுப்புகளுடன் புதிதாக 3 முதன்மை பாடத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு 6 பாடங்கள் இனிமேல் 5 பாடங்களாக குறைக்கப்படுகிறது. தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் 6 பாடங்கள் உள்ளன.

மருத்துவம் மற்றும் பொறியியல் இரண்டுக்கும் சேர்த்து படிக்கக்கூடிய வகையில் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் என 6 பாடங்கள் இருந்து வருகின்றன. இந்த பிரிவை தேர்வு செய்யும் மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவம் என இரண்டு துறைகளுக்கும் செல்ல முடியும்.

தற்போது, இந்த பிரிவிலிருந்து கணிதப்பாடம் நீக்கப்பட்டு தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 5 பாடங்களை கொண்டு தனியாக ஒரு புதிய பிரிவு ஏற்படுத்தப்படுகிறது.

அதன்படி மருத்துவ படிப்பிற்கு மட்டும் செல்லக்கூடிய மாணவர்கள் இந்த பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம். அதே போல் பொறியியல் துறை சார்ந்த படிப்புகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம் என 5 பாடங்களை கொண்ட பிரிவை தேர்வு செய்யலாம்.

வணிகவியல், வரலாறு போன்ற கலைப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவை தேர்வு செய்யக்கூடிய மாணவர்களுக்கும் 5 பாடங்கள் இருக்கும்.

அறிவியல், கலைப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவில் ஏற்கனவே இருந்த 6 பாடங்களை எழுத விரும்பும் மாணவர்கள் அந்த பாடத்தொகுப்புகளை தேர்வு செய்து கொள்ளலாம். இவர்களுக்கு மட்டும் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.

இந்த புதிய நடைமுறை அடுத்த கல்வி ஆண்டு (2020-2021) முதல் பிளஸ்-1 வகுப்பில் அமலுக்கு வரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News