செய்திகள்
சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி

சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிப்பு

Published On 2019-09-18 18:25 GMT   |   Update On 2019-09-18 18:25 GMT
தொட்டபெட்டா மலைசிகரத்தில் சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்களை வனத்துறையினர் சேகரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஊட்டி:

தொட்டபெட்டா மலைசிகரத்தில் சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்களை வனத்துறையினர் சேகரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் வனப்பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தொட்டபெட்டா மலைசிகரம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் செயல்பட்டு வருகிறது. ஊட்டி-கோத்தகிரி சாலை சந்திப்பில் இருந்து தொட்டபெட்டாவுக்கு செல்லும் சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது.

மலைப்பாதை கரடு, முரடாக இருந்ததால் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு நடந்து சென்றார்கள். சாலை மிகவும் பழுதடைந்து இருந்ததால், அது வாகனங்களின் டயர்களை பதம் பார்த்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வந்தனர். அதனை தொடர்ந்து சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று நீண்ட நாளாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.1.89 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தொட்டபெட்டா சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்காக மலைசிகரம் தற்காலிகமாக மூடப்பட்டது. புதியதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டதுடன், மழைநீர் சாலையில் தேங்காமல் வழிந்தோடும் வகையில் சாய்வாக போடப்பட்டது.

இந்த சாலை முழுமையாக சீரமைக்கப்பட்டு கடந்த 14-ந் தேதி திறக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு பின்னர் தொட்டபெட்டா மலைசிகரம் திறக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அங்கு சுற்றுலா வாகனங்களை நிறுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

தொட்டபெட்டா மலைசிகரத்தை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கண்டு களிக்கலாம். இது கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 636 மீட்டர் உயரத்தில் அமைந்து இருக்கிறது. சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வு எடுப்பதற்கு இருக்கைகள் போடப்பட்டு உள்ளது. அங்குள்ள தொலைநோக்கி இல்லத்தில் பொருத்தப்பட்ட நவீன தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி நகரம், குன்னூர், கேத்தி பள்ளத்தாக்கு, கோவை, அணைகள், அடர்ந்த வனப்பகுதிகள், கர்நாடகா மாநில எல்லை போன்றவற்றை பார்த்து மகிழலாம். உயரமான இடத்தில் இருந்து இயற்கை அழகை கண்டு ரசிப்பது சுற்றுலா பயணிகள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளது.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு வாகனங்களில் வருகை தரும் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்தக்கூடாது, வாகனங்களில் ஏதேனும் பாட்டில்கள் இருந்தால் அதனை வனப்பகுதிக்குள் வீச வேண்டாம், சுற்றுச்சூழலை பாதுகாக்க சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுரை கூறி வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் 1 லிட்டர், 2 லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை வாங்கி சேகரிக்கின்றனர். அவை பின்னர் மறுசுழற்சிக்காக எடுத்து செல்லப்படுகிறது.

வனத்துறை சார்பில், தொட்டபெட்டா சாலையோரத்தில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதில், சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு உணவளிக்கக்கூடாது. வனவிலங்குகளின் அருகே நின்று புகைப்படம், செல்பி எடுப்பது தங்களது உயிருக்கு ஆபத்தானதும், வனவிலங்குகளை தொந்தரவு செய்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

சாலை ஓரங்களில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவது தடை செய்யப்பட்டு உள்ளது. மீறுபவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி தண்டிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News