செய்திகள்
மாணவனின் சைக்கிளை போலீசார் பறித்துச்சென்ற காட்சி

ஹெல்மெட் சோதனையின் போது சைக்கிளை போலீசார் பறித்தனரா?

Published On 2019-09-18 07:31 GMT   |   Update On 2019-09-18 07:31 GMT
ஹெல்மெட் சோதனையின் போது போலீசார் சைக்கிளை பறித்ததாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவின் உண்மை பின்னணியை பார்ப்போம்.



தர்மபுரி அருகே ஹெல்மெட் சோதனையின் போது மாணவனின் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் போலீசார் நேற்று முன்தினம் மாலை வாகனசோதனை நடத்தி ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை பிடித்து வழக்கு பதிவு செய்து கொண்டிருந்தனர். 

அப்போது பள்ளி மாணவன் ஒருவன் சைக்கிளில் வந்தபோது அந்த மாணவனிடம் ஹெல்மெட் ஏன் போடவில்லை? என கேட்டு போலீசார் அந்த மாணவனின் சைக்கிளை பறிமுதல் செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி பரவியது. இது பரபரப்பாக பேசப்படுகிறது.

இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, “ஹெல்மெட் கேட்டு மாணவனின் சைக்கிளை பறிமுதல் செய்யவில்லை, என்று கூறினர். ஏரியூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான்.



அவன் கைகளை சைக்கிளில் இருந்து தூக்கி மேலே காண்பித்தபடி அடிக்கடி அந்த சாலையில் சென்று கொண்டிருந்தான். இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அவனை அழைத்து சைக்கிளுடன் அந்த இடத்தில் நிறுத்தி வைத்திருந்தார்” என போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி ஏரியூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு கூறும்போது, கைகளை விட்டபடி சைக்கிள் ஓட்டியதால் ஏதேனும் விபத்து நேரும் என்பதன் காரணத்தாலும், பள்ளி மாணவனுக்கு எச்சரிக்கை தருவதற்காகவும் சைக்கிளை பிடித்து வைத்திருந்து அரைமணி நேரத்திற்குப் பின்பு அனுப்பி வைக்கப்பட்டார். எச்சரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தான் இது. 

பள்ளி மாணவனின் பாதுகாப்பிற்காக அவனை எச்சரிக்கும் நோக்கத்துடனேயே சப்-இன்ஸ்பெக்டர் இவ்வாறு செய்துள்ளார். மாணவன் மீது எந்த வழக்கும் பதியவில்லை. மேலும் ஹெல்மெட்டோ, லைசென்ஸ்சோ கேட்கவும் இல்லை, என்றார்.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.
Tags:    

Similar News