செய்திகள்
காங்கிரஸ்

அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம் - தமிழக காங்கிரஸ் தீர்மானம்

Published On 2019-09-17 08:52 GMT   |   Update On 2019-09-17 08:52 GMT
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வரும்போது அவருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை:

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் முகுல்வாஸ்னிக், செயலாளர்கள் சஞ்ஜய் தத், டாக்டர் சிரிவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

* மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் நிறைவு விழாவை அக்டோபர் 3-ம் நாள் முதல் 9 ஆம் நாள் வரை அனைத்து மாவட்டங்களிலும் பாத யாத்திரை நடத்தி கொண்டாடுவது.

* ப.சிதம்பரத்தை பழிவாங்கும் பா.ஜ.க. அரசுக்கு கண்டனம்.

* உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்பது.

* மோடியின் நூறு நாள் ஆட்சியில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார மந்தநிலை ஏற்படுவது சகஜமான பூசி மொழுகியிருக்கிறார். நிலைமையை முற்றிலும் உணராமல் அதற்குரிய தீர்வுகளை காணாமல் செயல்பட்டு வருகிற பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்து மக்களை திரட்ட இந்த கூட்டம் தீர்மானிக்கிறது.

* இந்திய அரசியலமைப்பு சட்டமும், ஆட்சி மொழிகள் சட்டமும் இந்தி பேசாத மக்களுக்கு வழங்கியிருக்கிற பாதுகாப்புகளை உதாசீனப்படுத்துகிற வகையில் இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்க வேண்டுமென்று ஆணவத்தோடு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டிக்கிற வகையில் தமிழகத்திற்கு வருகை புரிகிறபோது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாக அவருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

* ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தை கைவிட வேண்டும். கல்விக் கடன்களை அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News