செய்திகள்
லாட்டரி

வடமதுரை அருகே மாணவர்களை குறிவைத்து சுரண்டல் லாட்டரி விற்பனை

Published On 2019-09-17 08:37 GMT   |   Update On 2019-09-17 08:37 GMT
வடமதுரை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பள்ளி மாணவர்களை குறிவைத்து சுரண்டல் லாட்டரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

வடமதுரை:

தமிழகத்தில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் அது பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது. வெளிமாநில லாட்டரிகளும் ஆன்லைன் லாட்டரிகளும் மக்களை ஏமாற்றி வரும் நிலையில் தற்போது பல ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ஜாக்பாட் சுரண்டல் லாட்டரி நடைபெற்று வருகிறது.

குறிப்பாக பள்ளிகள் அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் இந்த விற்பனை நடக்கிறது. ரூ. 2 முதல் ரூ.3 வரை பணம் கொடுத்து ஒரு டிக்கெட்டை கிழித்தால் உள்ளே என்ன பொருள் வருகிறதோ அதனை பரிசாக தருவதாக அறிவிக்கின்றனர்.

அந்த டிக்கெட்டின் மேல் வாட்ச், குக்கர், கூலிங்கிளாஸ் போன்ற கவர்ச்சிகரமான பரிசு பொருட்களையும் ஒட்டி வைத்துள்ளனர். அதனை பார்க்கும்போது மாணவர்கள் தங்களுக்கும் இந்த பரிசு கிடைக்கும் என நினைத்து ஏமாந்து வருகின்றனர்.

வீட்டில் தங்கள் குழந்தைகளுக்கு செலவுக்கு கொடுக்கும் பணத்தை சுரண்டல் லாட்டரி மூலம் இழந்து வருகின்றனர். இதனால் லாபம் அடைவது கடைக்காரர்கள் மட்டுமே. இதுபோன்ற ஒரு லாட்டரி மோகம் சிறு வயதிலேயே மாணவர்களுக்கு ஏற்பட்டு விட்டால் வளரும் காலத்திலும் அதே எண்ணம்தான் இருக்கும்.

எனவே இதுபோன்ற மாணவர்களை ஏமாற்றும் சுரண்டல் லாட்டரியை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News