செய்திகள்
தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தும் மு.க.ஸ்டாலின்

இன்று தந்தை பெரியார், தி.மு.கழக பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் ட்வீட்

Published On 2019-09-17 06:35 GMT   |   Update On 2019-09-17 06:35 GMT
தந்தை பெரியாரின் 141வது பிறந்தநாள் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் தீண்டாமை, பெண்ணடிமை ஆகியவற்றை எதிர்த்து தனது வாழ்நாள் முழுவதும் ஓயாத பிரச்சாரத்தை மேற்கொண்டவர் தந்தை பெரியார். அவரது  141வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் சிம்சன் சிக்னல் அருகே உள்ள பெரியார் சிலைக்கு சென்று அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், பொன்முடி, மா.சுப்பிரமணியன் தயாநிதிமாறன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்று பெரியாரின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியாரை நினைவுக் கூர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சுயமரியாதை - பகுத்தறிவு - சமூகநீதி - மொழியுரிமை - இன உணர்ச்சி ஆகிய ஐந்தின் விதைநெல்லாம் அய்யா பெரியாரின் பிறந்தநாள்.

தத்துவமாய் எங்களை இயக்கும் உங்கள் சொற்களையே ஆயுதங்களாகக் கொண்டே போராடுகிறோம் அய்யா! பெரியார் என்ற சொல்லே வெல்லும் சொல்! வெல்வோம்!வாழ்க பெரியார்!’ என பதிவிட்டுள்ளார்.



மேலும் திராவிட முன்னேற்றக் கழகம் இன்று 70வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையும் குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இருள் நீக்கி ஒளிகொடுத்த இயக்கமாம் தி.மு.கழக பிறந்தநாள் இன்று #DMK70.

இனம்-மொழி-நாடு காக்க நாம் நடத்திய போராட்டங்கள்,பெற்ற வெற்றிகள்,ஆட்சிப் பொறுப்பேற்று செய்த சாதனைகள் அதிகம் என்றாலும் பேரறிஞரையும், முத்தமிழறிஞரையும் வணங்கி நம் பயணத்தைத் தொடர்வோம்! வாழ்க திமுகழகம்! வெல்க தமிழ்!’ என பதிவிட்டுள்ளார்.


Tags:    

Similar News