செய்திகள்
மணல் திருட்டை தடுக்க முயன்ற போலீஸ்

மணல் திருட்டை தடுக்க முயன்ற போலீஸ் ஏட்டு மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி

Published On 2019-09-16 17:58 GMT   |   Update On 2019-09-16 17:58 GMT
கமுதி அருகே மணல் திருட்டை தடுக்க முயன்ற போலீஸ் ஏட்டு மீது லாரியை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கமுதி:

கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டி குண்டாறு ஓடையில் சமீப காலமாக மணல் திருட்டு அதிக அளவு நடந்து வருகிறது. இதுகுறித்து கிராம மக்கள் புகார் கொடுத்தனர். இந்தநிலையில் மணல் திருட்டு தொடர்பாக ரோந்து சென்று அதனை தடுக்க வேண்டும் என்று கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேந்திரன் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை, போலீஸ் ஏட்டு ராமநாதன் தடுத்து நிறுத்தினார். ஆனால் அந்த லாரி நிற்காமல் ராமநாதன் மீது மோதுவது போல் வந்தது. இதனால் லாரி அருகில் வரவும் ராமநாதன் விலகினார். இருப்பினும் அந்த லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழேவிழுந்த ராமநாதன் படுகாயமடைந்தார். இதனை பார்த்த மற்ற போலீசார், லாரியை பிடிக்க முயன்றனர். அதற்குள் லாரியை நடுவழியில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து போலீசார், ஏட்டு ராமநாதனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய லாரி டிரைவரான நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News