செய்திகள்
பயங்கரவாதிகள் அச்சுறுத்தலையொட்டி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவில், ரெயில் நிலையங்களை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டம்- சென்னையில் பலத்த பாதுகாப்பு

Published On 2019-09-16 06:28 GMT   |   Update On 2019-09-16 06:28 GMT
தசரா விழாவின் போது கோவில், ரெயில் நிலையங்களை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக தெரியவந்ததை அடுத்து சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை:

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் அடுத்த மாதம் (அக்டோபர்) 8-ந்தேதி தசரா திருவிழா நடைபெற உள்ளது.

கர்நாடகாவில் மைசூரிலும், தமிழ்நாட்டில் குலசேகரன் பட்டினத்திலும் தசரா திருவிழா மிக, மிக விமரிசையாக நடைபெறும்.

நவராத்திரி திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இந்து ஆலயங்களில் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நவராத்திரி தசரா திருவிழாவை சீர்குலைக்க போவதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த மிரட்டலை பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து கடிதம் மூலம் அரியானா மாநில ரெயில்வே போலீசாருக்கு அனுப்பியுள்ளனர். கராச்சியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி மசூத் அகமது என்பவன் பெயரில் அந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அரியானா மாநிலம் ரோதக் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு யஷ்பால் மீனா பெயரிட்டு வந்துள்ள அந்த கடிதம் இந்தியில் எழுதப்பட்டுள்ளது.

தபால் நிலைய சேவை மூலம் வந்துள்ள அந்த மிரட்டல் கடிதத்தில் ஜெய்ஷ்- இ- முகம்மது பயங்கரவாதிகள் கூறி இருப்பதாவது:-

எங்கள் இயக்கத்தினரை கொன்றதற்காக பழிக்கு பழி வாங்க முடிவு செய்துள்ளோம். இந்தியாவில் உள்ள 12 ரெயில் நிலையங்களையும், முக்கிய இந்து ஆலயங்களையும் குண்டு வைத்து தகர்ப்போம். அக்டோபர் 8-ந்தேதி இந்தியாவில் தசரா திருவிழா நடைபெறும் போது எங்கள் இலக்கை எட்டுவோம்.

இவ்வாறு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் வந்த இந்த மிரட்டல் கடிதம் பற்றி போலீசார் நேற்று தீவிர விசாரணையும் ஆய்வும் மேற்கொண்டனர். அந்த கடித மிரட்டல் குறித்து ரோதக் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரேந்திர சிங் கூறியதாவது:-

மும்பை, சென்னை, பெங்களூரு, ரோதக், ரிவாரி, ஹிதர் உள்பட 12 ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக பயங்கரவாதிகள் கடிதத்தில் எழுதி உள்ளனர். இதுபற்றி நாங்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளோம்.

ரோதக் ரெயில் நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் பீதி அடைய தேவை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளின் கடித மிரட்டலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை, பெங்களூரு, மும்பை உள்பட நாட்டின் முக்கிய ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.



ரெயில் நிலையங்களுக்குள் வருபவர்களை சாதாரண உடை அணிந்த போலீசார் ரகசியமாக கண்காணிக்க தொடங்கியுள்ளனர். பயங்கரவாதிகள் கைவரிசை காட்ட முடியாதபடி தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க ரெயில்வே போலீசாரை மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதற்கிடையே கோவில்களில் கைவரிசை காட்ட போவதாகவும் ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாதிகள் அச்சுறுத்தி இருப்பதால் தசரா திருவிழா நடக்கும் முக்கிய ஆலயங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கோவில்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவில்களுக்கு வரும் பக்தர்களை முழுமையாக சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மைசூர் தசரா திருவிழா பாதுகாப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீர் புல்வாமாவில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்களை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி தற்கொலை தாக்குதல் நடத்தி கொன்றான். அதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து பலாகோட் முகாமை தகர்த்து 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை அழித்தது. இதற்கு பழிக்குப்பழி வாங்க போவதாகத்தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தற்போது கடிதம் அனுப்பி உள்ளனர்.
Tags:    

Similar News