செய்திகள்
மழை நீர் செல்ல வழியில்லாமல் சாலையில் வாகனங்களை மூழ்கடித்தபடி செல்வதை படத்தில் காணலாம்.

திண்டுக்கல்-தேனி மாவட்டத்தில் பரவலாக கனமழை

Published On 2019-09-15 12:16 GMT   |   Update On 2019-09-15 12:16 GMT
திண்டுக்கல்-தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் மாலை நேரங்களில் சாரல் மழை பெய்தது. மழை காரணமாக இரவு நேரங்களில் இதமான சீதோஷ்ணம் நிலவியது.

நேற்றும் பகல் பொழுதில் கடும் வெயில் சுட்டெரித்தது. மாலையில் திடீரென கருமேகங்கள் சூழந்து இடி-மின்னலுடன் சுமார் ஒரு மணிநேரம் மழை பெய்தது. இதன்காரணமாக நாகல்நகர், ஆர்.எஸ்.ரோடு, மெயின்ரோடு, கிழக்குரதவீதி உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது.

பெரும்பாலான இடங்களில் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீரோடு மழைநீரும் கலந்து சென்றது. தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் தவித்தனர். பாதாள சாக்கடை நிரம்பி வீடுகளுக்குள் புகுந்ததால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

இரவு நேரத்தில் பலத்த காற்று வீசியதால் நகரில் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மேல் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். மின்ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

வேடசந்தூர் பகுதியில் ராஜேஸ்வரன் என்பவரது தோட்டத்தில் கட்டியிருந்த பசுமாடு மின்னல் தாக்கி பலியானது. ராஜேஸ்வரன் வீட்டுக்குள் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதேபோல் கொடைக்கானலிலும் கனமழை பெய்தது. விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்தாலும் அவர்கள் ஆர்வமுடன் பல்வேறு சுற்றுலா இடங்களையும் கண்டுகளித்தனர்.

குறிப்பாக நட்சத்திர ஏரியில் மழையில் நனைந்தவாறே ஆனந்தமாக படகுசவாரி செய்து மகிழ்ந்தனர். கோக்கர்ஸ்வாக், பைன்பாரஸ்ட், தூண்பாறை, குணாகுகை, பிரையண்ட் பூங்கா, குறிஞ்சி ஆண்டவர் கோவில் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இரவு நேரத்தில் காற்று வீசியதால் கடும் குளிர் நிலவியது.

இதேபோல் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, வேடசந்தூர், அய்யலூர், வடமதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பிறபகுதிகளிலும் நீண்டநாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக திண்டுக்கல் பகுதியில் பெய்த மழை குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணுமா என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து ஆத்தூர் காமராஜர் அணைக்கு நீர்வரத்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே திண்டுக்கல் நகரின் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணமுடியும்.

தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் பொழுதில் வெயில் அடித்தபோதும் மாலை நேரத்தில் மழை பெய்ததது. குறிப்பாக ஆண்டிப்பட்டி பகுதியில் சுமார் 2 மணிநேரம் கனமழை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மூலவைகையாற்றிலும் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது. இப்பகுதியில் தென்னை, வாழை உள்ளிட்டவைகளை பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்துள்ள மழை பயிர்கள் செழித்து வளர ஏதுவாக இருக்கும்.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது. இதனால் கண்மாய்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே விவசாயிகள் பணிகளை மும்முரமாக தொடங்கியுள்ளனர். நீண்டநாட்களுக்கு பிறகு பெய்த கனமழைஅனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Tags:    

Similar News