செய்திகள்
திருமாவளவன்

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏழை மாணவர்களை வெளியேற்றும் முயற்சி- திருமாவளவன்

Published On 2019-09-15 10:19 GMT   |   Update On 2019-09-15 10:19 GMT
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது ஏழை மாணவர்களை வெளியேற்றும் முயற்சி என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

திருச்சி:

திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இது பிஞ்சு உள்ளங்களில் நடத்தப்படும் கொடூரமான தாக்குதலாகும். பொதுத்தேர்வு என்பது மாணவர்களை வடிகட்டுவதற்கான ஒரு முயற்சி.

மாணவர்கள் மேற்படிப்புக்கு செல்லாமல் தடுத்து 5, 8-ம்வகுப்பு பொதுத்தேர்வு நடத்தி ஏழை எளிய மாணவர்களை, பள்ளியை விட்டு வெளியேற்றுவதற்கான ஒரு முயற்சி. இது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது. இதற்கு தமிழக அரசும் துணைபோவது, மற்றும் அவர்களுடன் கை கோர்ப்பது வேதனையளிக்கிறது.

ஜனநாயக சக்திகள் இதனை கடுமையாக எதிர்க்க வேண்டும். தேசிய அளவில் ஒருங்கிணைந்து இந்த முயற்சியை முறியடிக்க வேண்டும். தமிழக அரசு இதற்கான அரசாணையை திரும்பப்பெற வேண்டும்.

இந்தி மொழி இந்தியாவின் ஒரே மொழியாக இருந்தால் உலக அளவில் வலிமை மிக்கதாக உயரும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது அவர்களின் நீண்ட கால கனவு திட்டங்களில் ஒன்று. ஆனால் இது இந்தியாவை துண்டாடும் ஒரு முயற்சி.


ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி என்பதை முன்மொழிந்து இருக்கின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆபத்தான போக்கு இந்திய தேசத்தை பல கூறுகளாக சிதறடிக்கும். இந்த போக்கிலிருந்து தேசத்தை காப்பாற்ற ஜனநாயக சக்தி அகில இந்திய அளவில் ஒன்று சேரவேண்டும்.

தமிழகத்தில் பேனர்களை வைப்பதில்லை என்ற முடிவை சுபஸ்ரீ மரணத்துக்குப் பிறகு தி.மு.க. எடுத்துள்ளது மற்றும் பல தோழமைக் கட்சிகளும் எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. விடுதலை சிறுத்தை கட்சி நீண்ட காலமாக இந்தக் கருத்தை சொல்லி வருகிறது. இது டிஜிட்டல் பேனர் வைக்கும் நிறுவனத்திற்கு பாதிக்கும் என்ற எண்ணம் தேவையில்லை.

குடும்ப நிகழ்வாக இருக்கும் போது பாதுகாப்பாக பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வைப்பது இதில் வராது. அரசியல் நிகழ்ச்சிக்காக பிரம்மாண்டத்தை உருவாக்க வேண்டும் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பேனர்கள் வைப்பது கலாச்சாரமாக மாறி இருக்கிறது. இதில் ஆளும் கட்சிக்கு ஒரு அணுகு முறை, மற்ற கட்சிக்கு ஒரு அணுகுமுறையாக காவல் துறை நடந்து வருகிறது.

ஆளும் கட்சி நினைத்த இடத்தில் வைத்துக் கொள்ளலாம் . சாலைகளில் அமைத்து வைத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு வரையறை கிடையாது. ஆனால் வளரும் கட்சிகளாக இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சி பெரும் யுத்தமே காவல் துறையிடம் நடத்த வேண்டியிருக்கிறது. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பேனர்கள் வைப்பது தொடர்பாக எடுத்த முடிவை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு திருமாவளவன் பதில் அளித்ததாவது:-

கேள்வி: அமைச்சர் செல்லூர் ராஜூ அரசு திட்டங்களுக்கு பேனர்கள் அமைப்பது தவறில்லை என்று சொல்லியிருக்கிறாரே? அதைப்பற்றி உங்களது கருத்து?

பதில் : அரசு திட்டங்களை சொல்ல பல வழிகள் உள்ளது. சமூகவலைதளங்கள் உள்ளது. தொலைக்காட்சி மூலம் பிரச்சாரம் செய்யலாம். அதற்கு பேனர் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதை தடுக்கும் வகையில் அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்.

கே: தமிழகத்தில் மண்எண்ணை வழங்க கோரிக்கை வைத்ததை மத்திய அரசு நிராகரித்து, 33 சதவீதம் குறைத்துள்ளதே?

ப: ரே‌ஷன் கடை என்கிற பொது விநியோகத் திட்டத்தை மெல்ல, மெல்ல அழிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம். உலகமயமாக்கும் கொள்கையின்படி கார்ப்பரேட் நிறுவனங்களின் விருப்பப்படி பார்த்தால் பொது விநியோகத் திட்டம் கைவிட வேண்டும் என்பதற்காக மண்எண்ணை தேவையை மத்திய அரசு குறைத்துள்ளது.

இது பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வட இந்தியாவைச் சார்ந்த பணியாட்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் பொருளாதாரக் கொள்கையை வரவேற்பதாக உருவாகும் நிலையாகும்.

கே: எச்.ராஜா கூடிய விரைவில் எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்படுவார் என்று சொல்லியிருக்கிறாரே?

ப: அவர் பரபரப்புக்காக ஏதாவது சொல்லி கொண்டு இருப்பார். அதற்கு கருத்து சொல்ல ஒன்றுமில்லை என்றார்.

Tags:    

Similar News