செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு

அண்ணா பிறந்தநாள் அதிமுக-திமுக.வினர் பேனர் வைக்கவில்லை: ஐகோர்ட்டு உத்தரவால் நடவடிக்கை

Published On 2019-09-15 08:32 GMT   |   Update On 2019-09-15 09:46 GMT
பேனர் வைப்பதற்கு ஐகோர்ட்டு விதித்த தடை உத்தரவால் அண்ணா பிறந்தநாளில் அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பேனர் வைப்பதை தவிர்த்து முன்னுதாரணமாக செயல்பட்டுள்ளனர்.

சென்னை:

பள்ளிக்கரணையில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரான ஜெயகோபால் இல்ல திருமணத்துக்காக கடந்த 12-ந்தேதி அ.தி.மு.க.வினர் வழிநெடுக பேனர் வைத்திருந்தனர்.

ரேடியல் சாலையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஒன்று கழன்று விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்தார்.

தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் அனைவருமே ஒட்டு மொத்தமாக கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இனி, கட்சியினர் யாரும் பேனர் வைக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று சென்னையில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அண்ணாசாலையில் உள்ள அண்ணாசிலைக்கு அ.தி.மு.க. சார்பில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தார்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளின் போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் தங்களது கட்சி தலைவர்களை வரவேற்று வழி நெடுகிலும் பேனர் வைப்பார்கள். ஆனால் இன்றைய அண்ணா பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் அதுபோன்று எந்த பேனர்களையுமே 2 கட்சியினரும் வைக்க வில்லை. “பேனர் கலாச்சாரம் கூடாது” என்று அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சி தலைமையினரும் விடுத்த வேண்டுகோளை ஏற்று 2 கட்சியினரும் அதனை முறையாக இன்று கடைப்பிடித்தனர்.

இதனால் அண்ணாசாலை மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளில் இன்று அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. பேனர்களை எந்த இடத்திலும் காண முடியவில்லை. இந்த கட்சிகளின் சார்பில் ஒருவர்கூட பேனர் வைக்கவில்லை. இதனால் சாலையோர பகுதிகள் பேனர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று ம.தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களை வரவேற்றும் பேனர்கள் வைக்கப்படவில்லை.

திருவண்ணாமலையில் இன்று அண்ணா பிறந்த நாளையொட்டி தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. காலை 10 மணிக்கு கவியரங்கத்ததுடன் தொடங்கிய இந்த விழாவில் கனிமொழி எம்.பி., கவிஞர் பா.விஜய் மற்றும் அ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாலையில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இவர்களை வரவேற்றும் தி.மு.க.வினர் பேனர்கள் வைக்காமல் தவிர்த்தனர். பேனர்களுக்கு பதிலாக விழா நடைபெறும் இடம் அருகில் அலங்கார வளைவுகள் மட்டும் அமைக்கப்பட்டிருந்தன.

என்ஜினீயர் சுபஸ்ரீயின் மரணம் ஏற்படுத்திய சோகத்தை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு விதியை மீறி பேனர் வைக்கும் அரசியல் கட்சிகளையும், அதனை கண்டு கொள்ளாத அதிகாரிகளையும், கடுமையாக கண்டித்து இருந்தது.

பேனர்களுக்கு தடை விதிக்க இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது? என்றும் ஐகோர்ட்டு கடுமையாக சாடி இருந்தது. இதனையடுத்து இன்று நடைபெற்ற விழாவில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் உடனடியாக பேனர் வைப்பதை தவிர்த்து முன்னுதாரணமாக செயல்பட்டுள்ளனர்.

 


இது வரவேற்கும் வகையிலேயே அமைந்துள்ளது. மற்ற அரசியல் கட்சிகளும் பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று அறிவித்துள்ளன. இதனால் இனி எந்த அரசியல் கட்சியினரும் தங்களது விழாக்களில் பேனர்களை வைக்க மாட்டார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போதுமே அரசியல் கட்சியினர் இதுபோன்ற வி‌ஷயங்களை தொடர்ச்சியாக கடைப்பிடிக்க மறந்து விடுவார்கள். அதுபோன்று பேனர் விவகாரமும் ஆகிவிடக்கூடாது என்பதே அனைவரது கோரிக்கை யாகவும் உள்ளது.

எனவே அரசியல் கட்சிகள், ‘பேனர் வைக்க மாட்டோம்’ என்று எடுத்துள்ள இந்த உறுதிமொழியை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்போது தான் இன்னொரு சுபஸ்ரீ பலியாகாமல் தடுக்க முடியும்.

அரசியல் கட்சி தலைவர்களை போன்று திரை உலகமும் பேனர் கலாச்சாரத்துக்கு எதிராக குரல் கொடுத்துள்ளது. தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களான கமல், விஜய், சூர்யா ஆகியோர் இனி, ரசிகர்கள் பேனர் வைக்கக்கூடாது என்று கட்டளையிட்டுள்ளனர்.

நடிகர் விவேக்கும் பேனர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளார்.

இதன் மூலம் சினிமா துறையை சேர்ந்தவர்களும் இனி தங்களது விழாக்களில் பேனர்களை முற்றிலுமாக தவிர்க்கவே திட்டமிட்டுள்ளனர்.

விதிகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் இதனை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உள்பட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து தடையை மீறி பேனர்கள் வைப்பவர்கள் மீது இனி வரும் காலங்களில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News