செய்திகள்
திமுக எம்.பி கனிமொழி

5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு - அறிவிப்பை திரும்பப்பெற கனிமொழி எம்பி வலியுறுத்தல்

Published On 2019-09-14 13:41 GMT   |   Update On 2019-09-14 13:41 GMT
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசின் அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என தி.மு.க. எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசின் அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என தி.மு.க. எம்.பி கனிமொழி இன்று வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,  5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு என்ற அ.தி.மு.க. அரசின் அறிவிப்பு நமது கல்விமுறைக்கு விடப்பட்ட மிகப்பெரும் சவால்.

உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்த சிறு வயதிலேயே இத்தனை பொது தேர்வுகளை நடத்தி அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய பெற்றோர்களுக்கும் சேர்த்து மன அழுத்தத்தையும், பயத்தையும் கொடுக்கக்கூடிய இந்த அறிவிப்பு, யாரை திருப்திப்படுத்துவதற்காக வெளியிடப்படுகிறது?

மத்தியில் ஆளும் தங்களுடைய எஜமானர்களையா அல்லது இங்கு இருக்கும் மற்ற பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மடைமாற்றம் செய்யும் வேலையா? எதுவாகினும் பாதிக்கப்படப் போவது நமது எதிர்கால சந்ததியினர் தான் என்பதை கருத்தில் கொண்டு, இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்பது நாட்டை ஒருபோதும் ஒருங்கிணைக்காது என அதில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News