செய்திகள்
கைது

கிருமாம்பாக்கம் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

Published On 2019-09-14 09:39 GMT   |   Update On 2019-09-14 09:39 GMT
கிருமாம்பாக்கம் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகூர்:

புதுவையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டு நடந்து வந்தது.

இதேபோல் கிருமாம்பாக்கம் பகுதிகளிலும் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், கிருமாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கிருமாம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அவர்கள் பரிக்கல்பட்டு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி ஆவணங்களை கேட்டு சோதனையிட்டனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த நத்தம் பகுதியை சேர்ந்த தண்டபாணி (வயது38). என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும், அதனை அவர் கடந்த 12-ந் தேதி முள்ளோடை ஆர்.டி.ஓ. செக்போஸ்ட் அருகே திருடியதும் தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்களிள் உட்பட 5 மோட்டார் சைக்கிளும், தவளக்குப்பம் போலீஸ் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் 2 மோட்டார் சைக்கிளும், மற்ற இடங்களில் 3 மோட்டார் சைக்கிளும் என மொத்தம் 10 மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சமாகும்.

இதையடுத்து தண்டபாணியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட தண்டபாணி மீது தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News