செய்திகள்
கஞ்சா

நெல்லித்தோப்பு பெரியார் நகரில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

Published On 2019-09-14 09:20 GMT   |   Update On 2019-09-14 09:20 GMT
நெல்லித்தோப்பு பெரியார் நகரில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

புதுவையில் நாளுக்கு நாள் கஞ்சா விற்பனை பெருகி வருகிறது. கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் வெளி மாநில சுற்றுலா பயணிகள் மற்றும் கல்லூரி- பள்ளி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வருகிறார்கள்.

வேலையற்ற இளைஞர்களை வலை விரித்து அவர்களை கஞ்சா பழக்கத்துக்கு ஆளாக்குவதோடு அவர்கள் மூலம் கஞ்சா வியாபாரம் செய்து வருகிறது.

புதுவையில் குற்ற சம்பவங்கள் பெருக காரணமே கஞ்சா பழக்கத்தில் உள்ளவர்களால்தான். இவர்கள் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி கஞ்சா வாங்க பணம் இல்லாவிட்டால் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

மேலும் கஞ்சா போதையில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் தன்னை மறந்து குற்றசம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

முன்பு புதுவை நகர பகுதியில் ஒருசில இடங்களில் நடைபெற்ற கஞ்சா விற்பனை தற்போது கிராமப்புற பகுதிகளில் குறிப்பாக அரியாங்குப்பம், வில்லியனூர் பகுதிகளில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

இதனை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டாலும் அதனை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

அவ்வப்போது கஞ்சா விற்கும் கும்பலை கைது செய்து சிறையில் அடைத்தாலும் அவர்கள் விரைவிலேயே விடுதலையாகி மீண்டும் கஞ்சா விற்பனையை தொடரத்தான் செய்கிறார்கள்.

இந்த நிலையில் நெல்லித்தோப்பு பெரியார் நகர் பகுதியில் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் சாதாரண உடையில் சென்று கண்காணித்தனர். அப்போது ரகசிய இடத்தில் வைத்து கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கேசவன் (வயது 23) மற்றும் ருத்ரேஷ்மணி (21) என்பதும், இவர்கள் திருக்கோவிலூரை சேர்ந்த கஞ்சா மொத்த வியாபாரியான சேகரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து கேசவன் மற்றும் ருத்ரேஷ்மணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயிரத்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் கஞ்சா மொத்த வியாபாரியான சேகரை கைது செய்ய தனிப்படை போலீசார் திருக்கோவிலூர் விரைந்துள்ளனர்.

Tags:    

Similar News