செய்திகள்
தற்கொலை

பாபநாசம் அருகே சொத்து பிரச்சினையில் தாய்-மகன் தற்கொலை

Published On 2019-09-14 06:00 GMT   |   Update On 2019-09-14 06:00 GMT
பாபநாசம் அருகே சொத்து பிரச்சினையில் தாய்-மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாபநாசம்:

தஞசை மாவட்டம் பாபநாசம் தாலுகா மேலசெம்மங்குடி கிராமம் குடியானத்தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது38). தஞ்சையில் டாக்ஸி டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையும் உள்ளனர்.

கஜேந்திரனின் தாயார் சிவகாமி(65). அவர் தனியாக வசித்து வந்துள்ளார். கஜேந்திரனுக்கும், அவரது அண்ணன் மகேந்திரனுக்கும் சொத்து பிரச்சினையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மகன்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்ததால் சிவகாமி மனமுடைந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு வி‌ஷம் குடித்து விட்டார். அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த12-ந்தேதி இறந்து விட்டார்.

இதையடுத்து சொத்தை பிரித்து கொடுத்தால்தான் தாயாரின் பிணத்தை எடுக்க விடுவேன். இல்லை நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று தனது அண்ணன் மகேந்திரனிடம் கஜேந்திரன் தகராறு செய்துள்ளார்.

பின்னர் அவர் நேற்று இரவு பாநாசம்-சாலியமங்கலம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கு இன்று காலை அறையை விட்டு வெளியில் வந்து விட்டு மீண்டும் அறைக்கு சென்ற கஜேந்திரன் பாத்ரூமில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாக ரெத்தினம் மற்றும் போலீசார் உடலை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் தாய் உடல் தஞ்சை மருத்துவமனையிலும், மகனின் உடல் பாபநாசம் மருத்துவமனையிலும் உள்ளது. குடும்ப தகராறில் தாயும், மகனும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News