செய்திகள்
சென்னை ஐகோர்ட்

பேனர் வைக்க கூடாது என முதல்வர் அறிக்கை விடலாமே? -நீதிபதிகள் கருத்து

Published On 2019-09-13 07:09 GMT   |   Update On 2019-09-13 07:12 GMT
பேனர்கள் வைக்கக் கூடாது என தமிழக முதல்வர் அறிக்கை விடலாமே? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
சென்னை:

சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்துள்ளபோதிலும், நிலைமை இன்னும் மாறவில்லை. பொதுமக்களுக்கு இடையூறாக சாலையோரத்திலும், சாலையின் நடுவில் உள்ள சென்டர்மீடியனிலும் பேனர்கள் வைப்பது தொடர்கிறது.

இந்நிலையில், பேனர் விழுந்து சென்னை இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஷேசசாயி ஆகியோர் கொண்ட அமர்வு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:-

எந்த நிகழ்வு என்றாலும் பேனர்கள் வைத்தால்தான் வருவார்களா? மனித உயிர்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. சட்டவிரோத பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். குற்றம் நடக்க அனுமதிக்கிறீர்கள், பின்னர் குற்றவாளிகள் பின்னால் ஓடுகிறீர்கள்.

சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக அரசுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கும் நீதிமன்றம், அதனை செயல்படுத்த முடியாது என நினைக்கிறீர்களா? நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை அரசு செயல்படுத்தும் என்ற நம்பிக்கை குறைந்துவிட்டது. விதிகளை மீறி பேனர் வைக்க கூடாது எனவும், பேனர் வைக்க மாட்டோம் எனவும் முதல்வர் அறிக்கை விடலாமே?

சட்டவிரோத பேனர்கள் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் பிற்பகல் 2.15 மணிக்கு  நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News