செய்திகள்
சென்னை ஐகோர்ட்

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சட்டவிரோத பேனர்கள் தொடர்கின்றன- நீதிபதிகள் கடும் அதிருப்தி

Published On 2019-09-13 05:33 GMT   |   Update On 2019-09-13 08:41 GMT
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விதிகளை மீறி பேனர்கள் வைப்பது தொடர்வதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
சென்னை:

குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்த இளம்பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ(23). தனியார் மென் பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் ஸ்கூட்டரில் சென்ற போது, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பேனர்களில் ஒன்று சரிந்து இவர் மீது விழுந்தது.

இதனால் சாலையில் விழுந்த சுபஸ்ரீ மீது தண்ணீர் லாரி மோதியதில் அவர் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதைப் பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சத்தியநாராயணன், சே‌ஷ சாயி ஆகியோர் அமர்வு இன்று காலை வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர்.

அப்போது வக்கீல் லட்சுமி நாராயணன் என்பவர் ஆஜராகி முறையிட்டார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்ட விரோதமாக பேனர்கள் வைக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இருந்தாலும் பள்ளிக்கரணையில் நேற்று அ.தி.மு.க. பிரமுகர் வீட்டு நிகழ்ச்சிக்காக சட்ட விரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பேனர் சரிந்து சுபஸ்ரீ என்ற பெண் மீது விழுந்துள்ளது.

இதனால் அந்த பெண் சாலையில் விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியதில் அவர் பரிதாபமாக இறந்துள்ளார். இதுதொடர்பாக லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் பேனர் வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே கோர்ட்டு தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேனர்கள் வைப்பது தொடர்பாக ஐகோர்ட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் அதை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. அதிகாரிகளின் மெத்தனப்போக்கே பேனர்களால் ஏற்படும் உயிர் பலிக்கு காரணம்.

சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பதில் அரசியல்வாதிகள் பாகுபாடு இல்லாமல் விதிகளை மீறுகின்றனர். தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பேனர் வைப்பது தொடர்கிறது. அரசியல்வாதிகளின் சொல்லுக்கேற்ப அதிகாரிகள் செயல்படுகின்றனர்.

ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் கருணைத் தொகை தந்தால் பிரச்சனை முடிந்து விடும் என நினைக்கின்றனர். ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சிகள் போல இவர்கள் செயல்படுகின்றனர்.

இனி நாங்கள் செய்ய வேண்டியது ஒரே வேலை தான். தலைமை செயலகத்தை தூக்கிக் கொண்டு வந்து ஐகோர்ட்டில் வைப்பது தான். அதிகாரிகளின் பணியை நாங்கள் மேற்கொள்ள முடியுமா? ஏற்கனவே பேனர் தொடர்பான வழக்கு இன்று 5-வது வழக்காக வருகிறது. அப்போது இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து, சட்ட விரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டது தொடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது கோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் விஜய நாராயணன் ஆஜராகி இருந்தார். அவரைப் பார்த்து நீதிபதிகள் கூறியதாவது:-

அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இன்னும் எத்தனை லிட்டர் மனித ரத்தம் தேவைப்படுகிறது. நாங்கள் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வந்துள்ளோம். ஆனால் அதிகாரிகள் அதை அமல்படுத்துவது இல்லை.

திருமண நிகழ்ச்சி, காது குத்தும் நிகழ்ச்சி, கிடா வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வைத்தால் தான் அரசியல்வாதிகள் வருவார்களா? இப்போது கூட அதிகாரிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்திருக்க மாட்டார்கள்.



சுபஸ்ரீ என்ற பெண் பலியான வழக்கில் ஐகோர்ட்டில் நம்மை(அதிகாரிகள்) அட்வகேட் ஜெனரல் எப்படி காப்பாற்றுவார் என்று தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். இந்த சாலையில் பொதுமக்களின் ரத்தம் எவ்வளவு தான் கொட்ட வேண்டும். இதுபோன்ற சட்ட விரோத செயல்களை தடுக்காத அரசு அதிகாரிகள் தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்ப்பார்களா?

எந்த முகத்தை வைத்துக் கொண்டு பொதுமக்கள் முன்னால் சாலையில் செல்வார்கள்? சட்டவிரோதமாக பேனர்களால் உயிர்பலி ஏற்படும் போது, அந்த குடும்பத்துக்கு சில லட்சங்கள் நிவாரணம் கொடுத்து விட்டு, அதன்பிறகு யார் மீதாவது வழக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நினைத்துப் பார்க்கிறார்களா? நிவாரணம் மட்டும் கொடுத்தால் உயிரிழந்தவர் மீண்டும் வந்து விடுவாரா?

கடந்த ஆண்டு வெளிநாட்டில் இருந்த வந்த வாலிபர் மீது கோவையில் பேனர் விழுந்து பலியானார். அப்போது ஐகோர்ட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. அதில் ஒன்றை கூட அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை.

இந்த நாட்டில் மட்டும் தான் ஐகோர்ட்டு உத்தரவை பூஜ்ஜியம் சதவீதம் கூட அமல்படுத்துவதில்லை. இதுவரை 150 பேர் பலியாகி விட்டனர். பொதுமக்களின் உயிரை காப்பது எங்களின் கடமை. இந்த அரசு மீது நம்பிக்கையை இழந்து விட்டோம். இதுவரை நாங்கள் பிறப்பித்த உத்தரவுகளில் ஒன்றை கூட பின்பற்றவில்லை.

கோர்ட்டு அவமதிப்பு தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி முதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு 2019 ஜனவரி 27-ந் தேதி, மார்ச் 13, மார்ச் 28, ஜூன் 25, ஜூலை 29, ஆகஸ்டு 7-ந் தேதி என்று பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு உத்தரவை கூட நடைமுறைப்படுத்தவில்லை.

இதுவரை நடந்த முதல் ‘எபிசோடு’ முடிந்து விட்டது. இன்றிலிருந்து இரண்டாது எபிசோடை தொடங்கி விட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அப்போது வக்கீல் லட்சுமி நாராயணன் எழுந்து, ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தும் விதமாக தி.நகரில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனரை அகற்றிய அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இது தான் தமிழகத்தின் நிலை என்றார்.

நேற்று கூட துரைப்பாக்கம் முதல் பல்லாவரம் வரை அ.தி.மு.க. பிரமுகர் சட்ட விரோதமாக பேனர் வைத்துள்ளார். ஒரு அதிகாரி கூட இதை பார்க்கவில்லையா?

இன்று காலை கூட மெரினா காமராஜர் சாலையில் ராணி மேரி கல்லூரி முதல் பல்கலை கழகம் வரை ஆளும் கட்சி சார்பில் சாலை நடுவே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் அனுமதி வழங்கினார்கள்?

அமைச்சர்கள் நிகழ்ச்சிகளுக்கு போகும் போது பேனர் வைக்க வேண்டுமா? அவர்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்க மாட்டார்களா? பேனர்களில் தான் பார்க்க வேண்டுமா?

இது போல சட்ட விரோதமாக பேனர்கள் வைக்கக்கூடாது என்று தமிழக முதல்-அமைச்சர் ஒரு அறிக்கையாவது வெளியிட்டாரா?

ஏற்கனவே முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் நிகழ்ச்சிக்காக கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரை சட்ட விரோதமாக அ.தி.மு.க.வினர் பேனர் வைத்தனர். இது தொடர்பாக நாங்கள் உத்தரவு பிறப்பித்தோம். அதன் பின்பும் இதுபோன்ற சட்டவிரோத பேனர்கள் வைக்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் அறிக்கை வெளியிடவில்லை.

இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் பாகுபாடு இல்லாமல் சட்டவிதிகளை மீறுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் என்ன தான் செய்கிறார்கள்? அவர்கள் தமிழகத்தில் தான் இருக்கிறார்களா?

இவ்வாறு அவர்கள் கூறி ஆவேசப்பட்டனர்.

அப்போது அட்வகேட் ஜெனரல் விஜயநாராயணன் எழுந்து, சட்ட விரோதமாக வைக்கப்படும் பேனர்களை தடுக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

உடனே நீதிபதிகள், அதிகாரிகள் ஆலோசனை என்ற பெயரில் பிஸ்கட் சாப்பிட்டு, டீ குடித்து விட்டு சிறிய குழு, பெரிய குழு அமைப்பார்கள். பின்னர் பிஸ்கட்டை மாற்றுவது போல தீர்மானத்தை மாற்றி விடுவார்கள்.

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு விட்டது. ஆனால் சீனாவில் இருந்து கட்சிக் கொடிகள் ஏராளமாக பிளாஸ்டிக்கில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் ஆளும் கட்சியை மட்டும் குறை சொல்லவில்லை. என்றாவது தி.மு.க. தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளாரா? என்றனர்.

அப்போது ஐகோர்ட்டில் இருந்த தி.மு.க. வக்கீல் கண்ணதாசன் எழுந்து, சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கக் கூடாது என்று தி.மு.க. தலைவர் அறிவுறுத்தி உள்ளார் என்றார்.

நாட்டில் நடக்கும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் தடுக்க அரசியல் கட்சியினர் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்.

இளம்பெண் பலியான சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பகுதி போலீஸ் உதவி கமி‌ஷனர், மாநகராட்சி துணை கமி‌ஷனர் ஆகியோர் இன்று மதியம் 2.15 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். அதற்கு முன்பாக மெரினா காமராஜர் சாலையில் வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் அகற்றி அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News