செய்திகள்
முருகன் இட்லி

முருகன் இட்லி தயாரிப்பு கூட உரிமம் ரத்து- அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Published On 2019-09-12 03:43 GMT   |   Update On 2019-09-12 03:43 GMT
அம்பத்தூரில் உள்ள முருகன் இட்லி தயாரிப்பு கூடத்தில் தரமற்ற உணவு தயாரிக்கப்பட்டதால் அதனை ஆய்வு செய்த அதிகாரிகள் அந்த உணவு தயாரிப்பு கூட உரிமத்தை ரத்து செய்தனர்.
சென்னை:

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முருகன் இட்லி கடை உள்ளது. சென்னையில் உள்ள கடைகளுக்கு மொத்தமாக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள உணவு தயாரிப்பு கூடத்தில் இருந்து தான் உணவு தயாரித்து அனுப்பப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் முருகன் இட்லி கடையில் உணவில் புழுக்கள் இருப்பதாக வீடியோக்கள் வெளியாகி வந்தது.

திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் முருகன் இட்லி கடைகளில் வினியோகிக்கப்படும் உணவுகள் சுகாதாரமின்றி இருப்பதாகவும், உணவுகளில் புழு உள்ளிட்ட பூச்சிகள் இருப்பதாகவும் அடிக்கடி புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஆய்வு நடத்திய அதிகாரிகள் உணவு கூடத்தில் பூச்சி தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படவில்லை மற்றும் உணவு வகைகள் சுகாதாரமின்றி இருப்பது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை கண்டுபிடித்து அவற்றை 15 நாட்களுக்கு சரிசெய்யுமாறு நோட்டீஸ் கொடுத்தனர்.

இதற்கிடையே பாரிமுனையில் உள்ள முருகன் இட்லி கடையில் உணவில் புழு இருப்பதாக வாட்ஸ்-அப் மூலம் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள முருகன் இட்லி கடை தயாரிப்பு கூடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது முறைகேடு இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து முருகன் இட்லி தயாரிப்பு கூட உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக நோட்டீஸ் ஓட்டினர். மேலும் உரிய விளக்கம் அளிக்கும் வரை இந்த உணவு தயாரிப்பு கூடம் இயங்க கூடாது எனவும் அவர்கள் தெரிவித்து விட்டு சென்றனர்.
Tags:    

Similar News