செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

திமுக ஆட்சி காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது? முதல்வர் கேள்வி

Published On 2019-09-11 15:33 GMT   |   Update On 2019-09-11 15:33 GMT
திமுக ஆட்சி காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது? என மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
கோவை:

திமுக ஆட்சியில் 2006 முதல் 2010 மார்ச் வரை மட்டும் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் பெறப்பட்டு 2 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனைக் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. 

அந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு, செயல்படும் தொழில் நிறுவனங்கள் எத்தனை? அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டன என்பதையெல்லாம் குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி கோவையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் 40 ஆண்டுகளாக எந்த முதல்-அமைச்சரும் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவில்லை. எதிர்க்கட்சித்தலைவர்  மு.க.ஸ்டாலின் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். தமிழக அரசை பாராட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை.  

விமர்சனம் செய்யாமல் இருந்தாலே பாராட்டுகுரியது தான். அரசு எப்படி செயல்படுகிறது என்பது மு.க.ஸ்டாலினுக்கு தெரியாது அவருக்கு அதில் ஈடுபாடும் இல்லை. அதிமுக ஆட்சியின் செயல்பாடுகளை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாட்டை பற்றி கவலைப்படாத கட்சி திமுக.

திமுக ஆட்சி காலத்தில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன? அதிமுக ஆட்சியை விமர்சிக்க திமுகவுக்கு தகுதியில்லை.  யாரோ ஒருவர் எழுதி கொடுப்பதை பேசும் ஸ்டாலினுக்கு இதுபற்றி தெரிய வாய்ப்பில்லை.

திமுக ஆட்சியில் தொழில் முதலீடு ரூ.26 ஆயிரம் கோடி தான். அதிமுக ஆட்சியில் ரூ.53 ஆயிரம் கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளன
ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது? எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன? என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதனைதொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி,


வெளிநாட்டு பயணத்தின் மூலம் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. தொழில் துவங்க எப்படியும் 3 அல்லது 4 ஆண்டுகள் ஆகும். இன்னும் பல தொழிலதிபர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 29 தொழில்கள் புதியதாக தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. 

கோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்க ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்கு புறவழிச்சாலை அமைக்க ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

உபரி நீரை சேமிக்க ரூ.600 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகளை கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.  ஒரு சொட்டு நீர் கூட வீணாக கூடாது என்பதே எங்கள் நோக்கம். 1,869 ஏரிகளை பராமரிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு நல்ல திட்டங்களை அறிவித்தால் ஆதரிப்போம். போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் விபத்தை கட்டுப்படுத்த முடியும். கேரள முதலமைச்சரை சந்திக்கும் போது பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளோம். தமிழகத்தின் நிலைமை குறித்து பேசி தெளிவுப்படுத்தவே வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளப்பட்டது. 

வெளிநாடுகளில் 10 வழிச்சாலைகள் உள்ளன, ஆனால் தமிழகத்தில் 8 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் வாழ் தமிழ் சொந்தங்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News