செய்திகள்
அண்ணாசாலையில் இருபுறமும் வாகனங்கள் இன்று ஓடிய காட்சி

அண்ணா சாலை மீண்டும் இரு வழிப்பாதை ஆனது

Published On 2019-09-11 06:44 GMT   |   Update On 2019-09-11 06:44 GMT
அண்ணாசாலை ஜி.பி.ரோடு முதல் ஒயிட்ஸ் ரோடு வரை மீண்டும் இருவழி சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் இன்றும், நாளையும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
சென்னை:

மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வந்ததால் அண்ணா சாலை போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது.

தற்போது மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்து விட்டன. எனவே அண்ணாசாலை ஜி.பி.ரோடு முதல் ஒயிட்ஸ் ரோடு வரை மீண்டும் இருவழி சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் இன்றும், நாளையும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதற்கான வழிமுறைகளை போக்குவரத்து போலீசார் வெளியிட்டு இன்று நடைமுறைப்படுத்தி உள்ளனர். அதன்படி அண்ணா சாலையில் ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து வெலிங்டன் சந்திப்பு வரை இருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து வாகனங்கள் வெலிங்டன் சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படுகிறது. வெலிங்டன் சந்திப்பில் இருந்து ராயப்பேட்டை மணிகூண்டு வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒயிட்ஸ் ரோடு இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலை நோக்கியும், அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள், ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலை நோக்கியும், அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூட்டை நோக்கியும் ஒயிட்ஸ் ரோட்டில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்ல முன்பு போலவே ஸ்மித்ரோடு ஒருவழி பாதையாகவே அனுமதிக்கப்படுகிறது.

அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகன போக்குவரத்தில் மாற்றம் இல்லை. அண்ணாசாலையில் இருந்து ஜெமினி அல்லது தேனாம்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் தற்போது எல்.ஐ.சி., டி.வி.எஸ். வழியாக அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லலாம்.

அண்ணா சிலையில் இருந்து பின்னி சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் செல்லலாம். பாரதி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.பி. ரோடு, ஒயிட்ஸ் ரோடு வழியாக அண்ணா சாலை சென்றடையலாம்.

ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் இருந்து அண்ணா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டை அடைந்து ஒயிட்ரோடு, ஜி.பி. ரோடு வழியாக செல்லலாம். பின்னி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலது புறம் திரும்பி அண்ணாசாலை, அண்ணா மேம்பாலம் செல்லலாம்.

பள்ளி சாலையில் இருந்து ஒயிட்ஸ் ரோடு செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலது புறம் திரும்பி அண்ணா சாலை பட்டுல்லாஸ் ரோடு வழியாக சென்று ஒயிட்ஸ் ரோட்டுக்கு போகலாம். கிரீம்ஸ் சாலையில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி செல்ல வேண்டிய வாகனங்கள் அண்ணா சாலை, ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திரும்பி அண்ணா மேம்பாலம் மற்றும் ஒயிட்ஸ் சாலை செல்லலாம்.

அண்ணா சாலையில் இருந்து ஸ்மித் ரோடு வழியாக ஒயிட் ரோடு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஒயிட்ஸ் சாலையில் இருந்து அண்ணா சாலை செல்லும் வாகனங்கள் திரு.வி.க. சாலையில் இடது புறம் திரும்பி, பின்னர் சத்யம் தியேட்டர், கான்டான் சுமித் சாலை சந்திப்பு, பீட்டர்ஸ் சாலை வழியாக அண்ணா சாலையை சென்று அடையலாம்.

இந்த மாற்றம் காரணமாக அண்ணா சாலை விரைவாக செல்லும் இரு வழிபாதையாக மாறி இருக்கிறது. எனவே இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றும் நாளையும் அண்ணாசாலை சோதனை ஓட்டம் அடிப்படையில் இரு வழிபாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் தொடர்ந்து இருவழி பாதையாகவே செயல்படும் என்று தெரிகிறது.
Tags:    

Similar News