செய்திகள்
கேஎஸ் அழகிரி

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியா? கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேச்சு

Published On 2019-09-06 19:13 GMT   |   Update On 2019-09-06 19:13 GMT
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா? என்பது குறித்து செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசினார்.
நாங்குநேரி:

நெல்லை மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நாங்குநேரியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார்.

அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தியவர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும் தான் என்பதை உலக மக்கள் அனைவரும் அறிவார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததைவிட தற்போது பொருளாதாரம் சரிந்து விட்டது. இதனால் தான் மோடி அரசு, காங்கிரஸ் தலைவர்களை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ப.சிதம்பரத்தை கைது செய்து உள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

நாங்குநேரியில் நடைபெறுகின்ற செயல்வீரர்கள் கூட்டத்துக்கும், தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது வழக்கமாக நடக்கின்ற கூட்டம் தான். இங்கு பேசியவர்கள், நாங்குநேரி காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால், இங்கு காங்கிரஸ் வேட்பாளர் தான் நிற்க வேண்டும் என்று கூறினார்கள். காங்கிரஸ் தனியாக நின்றால் இந்த கூட்டத்திலேயே வேட்பாளரை அறிவித்து விட்டு சென்று விடுவேன். நாம் ஒரு கூட்டணியில் இருக்கிறோம்.

அந்த கூட்டணியின் தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பது தான் கூட்டணி தர்மம் ஆகும். எனவே, இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி தான் முடிவு செய்யப்படும். இருந்தாலும், யார் தேர்தலில் போட்டியிட்டாலும் அவர்களை வெற்றி பெற செய்யக்கூடியது நமது கடமை ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பேசியவர்கள் அனைவருமே, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட வேண்டும். அதிலும் மண்ணின் மைந்தர்களுக்கு தான் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

கூட்டத்தில் வசந்தகுமார் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News