செய்திகள்
வசந்த்குமார் எம்பி

நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வலியுறுத்தி வருகிறோம் - வசந்தகுமார் எம்பி

Published On 2019-09-06 09:53 GMT   |   Update On 2019-09-28 11:29 GMT
நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாக உள்ளதால் இதனை வலியுறுத்துவோம் என வசந்தகுமார் எம்பி கூறியுள்ளார்.

சென்னை:

காலியாக உள்ள நாங்குனேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாங்குனேரி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனதால், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். எனவே இடைத்தேர்தல் நடக்கும் போது இந்த தொகுதியில் மீண்டும் காங்கிரசே போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் விரும்புகின்றனர்.

அதே நேரம் தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை சமீப காலமாக இடைத்தேர்தல்களில் தி.மு.க.வே களமிறங்கி வருகிறது. அந்த வகையில் நாங்குனேரியிலும் தி.மு.க. போட்டியிட்டால்தான் ஆளுங்கட்சியை பலமாக எதிர்க்க முடியும் என தி.மு.க.வினர் கருதுகின்றனர்.

சமீபத்தில் நெல்லை வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இது தொடர்பாக காங்கிரஸ் தலைமையுடன் பேசி முடிவு செய்யப்படும் என கூறினார்.

இதுவரை நாங்குனேரியில் களமிறங்குவது தி.மு.க. அல்லது காங்கிரஸ் என முடிவு செய்யப்படாததால் தொகுதியில் போட்டியிட இரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக வசந்தகுமார் எம்.பி.யிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

நாங்குனேரி, காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி. எனவே மீண்டும் இங்கு காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. இதை எங்கள் கட்சி தலைமையிடமும், தி.மு.க. தலைமையிடமும் வலியுறுத்துவோம்.

இடைத்தேர்தல் என்பதால் தி.மு.க. போட்டியிட வேண்டும் என்று சிந்தனை இருப்பது போல் தெரிகிறது. ஆனால் நாங்கள் எங்கள் கருத்தை வலியுறுத்தி வருகிறோம்.

இதை ராகுல் காந்தியின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். இறுதி முடிவு எப்படி இருந்தாலும் அதை தலைவணங்கி ஏற்றுக் கொள்வோம். யார் நின்றாலும் அவர்களை வெற்றி பெறச் செய்ய உழைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News