செய்திகள்
நாராயணசாமி

ஒரே ரே‌ஷன் கார்டு திட்டம் குறித்து எம்.எல்.ஏ.க்களிடம் கருத்து கேட்கப்படும் - நாராயணசாமி தகவல்

Published On 2019-09-06 09:51 GMT   |   Update On 2019-09-06 09:51 GMT
ஒரே ரே‌ஷன் கார்டு திட்டம் குறித்து எம்.எல்.ஏ.க்களிடம் கருத்து கேட்கப்படும் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன் பேசியதாவது:-

கூலி தொழிலாளர்கள் நாடு முழுவதும் இடம் பெயர்ந்து பணி செய்கின்றனர். அவர்கள் நலனுக்காக ஒரே நாடு, ஒரே ரே‌ஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

புதுவையில் வெளிமாநிலத்தை சேர்ந்த 40 ஆயிரம் பேர் கூலி வேலை செய்கின்றனர். இந்த சட்டம் மூலம் அரசின் உணவு பொருட்கள் கூலி தொழிலாளர்களுக்கு தடையின்றி கிடைக்கும்.

தமிழக அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற உள்ளது. இத்திட்டம் குறித்து கூட்டப்பட்ட கூட்டத்தில் புதுவை அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதல்-அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

மத்திய அரசின் அறிவிப்பினை ஏற்று புதுவையில் இயங்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கான சட்டம் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டு, அடுத்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தார்.

நாளையுடன் சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைதால் இந்த சட்டம் எப்போது கொண்டு வரப்படும்? 

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஒரே நாடு, ஒரே ரே‌ஷன்கார்டு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த முடியாது. அதன் சாதக, பாதகங்களை ஆராய வேண்டியுள்ளது. உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டபிறகு உரிய முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News