செய்திகள்
சென்னை ஐகோர்ட்

ஹெல்மெட்’ சட்டத்தை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2019-09-05 20:50 GMT   |   Update On 2019-09-05 20:50 GMT
தமிழகம் முழுவதும் ‘ஹெல்மெட்’ சட்டத்தை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

கட்டாய ‘ஹெல்மெட்’ சட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மோட்டார் வாகன புதிய சட்டவிதிகளை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று அரசு தரப்பு வக்கீலிடம் கேள்வி கேட்டனர்.

பின்னர் மனுதாரர் தரப்பு வக்கீலிடம் ‘இந்த வழக்கை தொடர்ந்துள்ள மனுதாரர் இதுவரை ‘ஹெல்மெட்’ அணிவது தொடர்பாக என்ன விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளார்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதுகுறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால், இந்த வழக்கில் மனுதாரரை நீக்கவிட்டு, ஐகோர்ட்டே தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்’ என்றும் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள், ‘சட்டத்தை அமல்படுத்துவது அதிகாரிகளின் கடமை. அந்த நிர்வாகப்பணிகளை எல்லாம் இந்த நீதிமன்றம் எடுத்து நடத்த முடியாது.

கட்டாய ‘ஹெல்மெட்’ சட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை மட்டுமே ஐகோர்ட்டு கண்காணிக்க முடியும். இந்த சட்டத்தை அமல்படுத்த போலீஸ் தவிர்த்து, போக்குவரத்துத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்பது குறித்தும் அரசு பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

தொடர்ந்து நீதிபதிகள், ‘சென்னையில் மட்டுமே ‘ஹெல்மெட்’ கெடுபிடிகள் நடக்கிறது. தமிழகம் முழுவதும் இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை. இந்த விவகாரத்தில் அனைத்து தரப்புக்கும் சமுதாய பொறுப்புகள் உள்ளன. ‘ஹெல்மெட்’ குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஊடகங்களும் தங்களது பங்களிப்பை செய்யவேண்டும்’ என்றும் கருத்து தெரிவித்தனர்.

பின்பு கட்டாய ‘ஹெல்மெட்’ சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.
Tags:    

Similar News