செய்திகள்
முதல்வர் நாராயணசாமி

புதுவை நகரில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்களை வெளியேற்ற நடவடிக்கை- நாராயணசாமி உறுதி

Published On 2019-09-03 17:30 GMT   |   Update On 2019-09-03 17:30 GMT
புதுவை நகரில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் நாராயணசாமி உறுதி அளித்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன் பேசியதாவது:-

புதுவை நகர பகுதி முழுவதும் சாலைகளில் பிச்சைக்காரர்கள் சுற்றி வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோயால் பாதிக்கப்பட்டோர், ஊனமுற்றோர், முதியோர், கண் பார்வையற்றோரை பல மாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் புதுவைக்கு அனுப்புகின்றனர்.

மனநல காப்பகத்தில் இருந்தும் கும்பல், கும்பலாக ரெயிலில் ஏற்றி விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நமது ரெயில் நிலையம் கடைசி நிறுத்தமாக இருப்பதால் இதை பயன்படுத்தி அனுப்பி வைக்கின்றனர்.

இப்படி வருபவர்கள் புதுவையில் பிச்சையெடுத்து அலைகின்றனர். இவர்களுக்கு தங்குமிடம் இல்லாததால் பிளாட்பாரத்தில் படுத்திருக்கின்றனர். இவர்கள் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர்.

அரசு மனிதாபிமானத்தோடு இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மத்திய அரசு நிதியுதவி பெற்று முதியோர் உதவி மையம், மனநலம் காப்பகம் வைத்திருப்பவர்கள் இவர்களை மீட்டு பாதுகாக்க வேண்டும்.

எனது தொகுதியில் வசிக்கும் அமைச்சர் கந்தசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்தது? என தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதிலளித்த முதல்- அமைச்சர் நாராயணசாமி, புதுவைக்கு ரெயில் மூலம் ஆதரவற்றோர் வருகின்றனர். காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்து மீண்டும் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பினோம்.

இதனால் 90 சதவீதம் ஆதரவற்றோர் நடமாட்டம் கடந்த 6 மாதமாக குறைந் திருந்தது. தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்போம்.

அமைச்சர் கந்தசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கட்டுப்பாட்டு அறை தொலை பேசிக்கு பேசியுள்ளான். உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுத்தனர். வீட்டில் சோதனை செய்தனர். வெடிகுண்டு ஏதும் இல்லை என கண்டறிந்தனர்.

போனில் பேசிய நபர் கூனிமேட்டில் இருந்து பேசியது தெரியவந்தது. இந்த நபர் ஏற்கனவே 2 ஆண்டு முன்பு என் வீட்டில் குண்டு வைத்துள்ளதாக பேசிய நபர்தான். அவர் அப்போது கைது செய்யப்பட்டு 3 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழக முதல்-அமைச்சர் வீட்டிற்கும் குண்டு வைத்துள்ளதாக பேசியுள்ளார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவரைப்பற்றி முழுமையான விபரங்களை சேகரித்து வருகிறோம். கடுமையான நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News