செய்திகள்
விநாயகர் சிலைகள்

கோவை மாநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 159 விநாயகர் சிலைகள் நாளை கரைப்பு

Published On 2019-09-03 09:20 GMT   |   Update On 2019-09-03 09:20 GMT
கோவை மாநகரில் வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகளில் 159 சிலைகள் நாளை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்படுகிறது.
கோவை:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாநகரில் 395 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.

இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி (தமிழகம்), விசுவ இந்து பரி‌ஷத், பாரத் சேனா, அனுமன் சேனா மற்றும் பொதுமக்கள் சார்பில் இந்த சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது.

கோவை மாநகரில் வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகளுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மெட்டல் டிடெக்டர் மூலமும் சோதனை நடத்தி வருகிறார்கள்.

கோவை மாநகரில் வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகளில் 159 சிலைகள் நாளை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்படுகிறது.

குனியமுத்தூர் குளத்தில் 39 சிலைகளும், முத்தண்ணன் குளத்தில் 4 சிலைகளும், சிங்காநல்லூர் குளத்தில் 32 சிலைகளும், சூலூர் குளத்தில் 3 சிலைகளும், வெள்ளகிணறில் 12 சிலைகளும், செங்குளத்தில் 3 சிலைகளும், குறிச்சி குளத்தில் 69 சிலைகளும், வாளையார் அணையில் ஒரு சிலையும் கரைக்கப்படுகிறது.

நாளை நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடர்ந்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

வழக்கமாக விநாயகர் சிலையை குளத்தில் கரைக்கும்போது சிலைகளுக்கு அணிவித்து உள்ள மாலைகளையும் சேர்த்து குளத்தில் விட்டு விடுவார்கள்.

இந்த ஆண்டு குளத்தின் நீர் மாசுபடுவதை தடுக்க விநாயகர் சிலைக்கு அணிவித்துள்ள மாலைகளை மாநகராட்சி சுகாதார துறையினர் குளத்தில் வீசி செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்டு உள்ள பகுதிக்கு மாநகராட்சி ஊழியர்கள் சென்று சிலைக்கு அணிவித்துள்ள மாலைகளை சேகரித்து செல்ல உள்ளனர்.
Tags:    

Similar News