செய்திகள்
ராமகோபாலன்

விநாயகர் சிலைகள் கரைப்பு: ராமகோபாலன் பங்கேற்கும் ஊர்வலத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Published On 2019-09-03 08:15 GMT   |   Update On 2019-09-03 08:15 GMT
இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் பங்கேற்கும் விநாயகர் ஊர்வலத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 2600 சிலைகளுக்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

விநாயகர் சிலைகளை நாளை மறுநாள் (5-ந்தேதி) முதல் ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைப்பதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். 7, 8-ந்தேதிகளிலும் ஊர்வலம் நடக்கிறது. இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் திருவல்லிக்கேணியில் பங்கேற்கும் விநாயகர் ஊர்வலம் 8-ந்தேதி மதியம் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்து முன்னணி சார்பில் சென்னை மாநகர் முழுவதும் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளும், அன்றைய தினமே கடலில் கரைக்கப்படுகிறது.

சென்னையில் விநாயகர் சிலை பாதுகாப்பு பணியில் தற்போது 10 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். கடைசி நாளான 8-ந்தேதி அன்று மட்டும் கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று மட்டும் ஆயிரக்கணக்கான சிலைகள் கடலில் கரைக்கப்படும் என்பதால் இந்த நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளனர்.

விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் 24 மணி நேரமும் விழா கமிட்டியினர் விழிப்புடன் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர் உள்ளிட்ட 6 இடங்களில் சிலைகளை கரைப்பதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

Tags:    

Similar News