செய்திகள்
முக ஸ்டாலின் - கேஎஸ் அழகிரி

அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு

Published On 2019-08-30 08:18 GMT   |   Update On 2019-08-30 08:18 GMT
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு சென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு சென்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். இருவரும் சுமார் 15 நிமிட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.

பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

நாங்குனேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்தால் அது தொடர்பாக தி.மு.க.வுடன் ஆலோசித்து முடிவு எடுப்போம்.

தனி மனித விரோதமாக ப.சிதம்பரத்தை மத்திய அரசு கைது செய்து பழி வாங்குகிறது. சிதம்பரத்தை அதிபுத்திசாலி என்று சொல்லும் சி.பி.ஐ. தனது விசாரணையை தொலைக்காட்சி மூலம் காட்ட வேண்டியது தானே?

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றுள்ள நிலையில் தனது பொறுப்புகளை மற்ற அமைச்சர்களிடம் பகிர்ந்து அளித்துவிட்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.

வெளிநாட்டில் இருக்கும் முதல்-அமைச்சர் தமிழகத்திற்கு அதிக முதலீட்டை கொண்டு வந்தால் மகிழ்ச்சி தான். ஏற்கனவே 2 முறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தில் நடந்து உள்ளது. இதில் போடப்பட்ட ஒப்பந்தங்களின் தற்போதைய நிலை என்ன? என்பதை அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News