செய்திகள்
மாணவி கடத்தல்

புதுவை அருகே மாணவியை கடத்திய தந்தை- மகன் போக்சோ சட்டத்தில் கைது

Published On 2019-08-28 09:16 GMT   |   Update On 2019-08-28 09:16 GMT
புதுவை அருகே மாணவியை கடத்திய தந்தை-மகன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சேதராப்பட்டு:

புதுவை அருகே தமிழக பகுதியான வானூர் பகுதியை சேர்ந்த 16 வயதுள்ள பிளஸ்-1 மாணவி வீட்டில் இருந்த போது திடீரென மாயமானார். மேலும் வீட்டில் வைத்திருந்த நகை-பணம் மற்றும் லேப்-டாப், கார்சாவி ஆகியவற்றையும் காணவில்லை. இதுகுறித்து அந்த மாணவியின் தாய் ஆரோவில் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாயமான மாணவியை திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு அருகே இரும்பை கிராமத்தை சேர்ந்த நடன கலைஞரான மோகன் என்ற குமரேஸ்வரன் (வயது26) என்பவர் கடத்தி சென்றதும், இந்த கடத்தலுக்கு அவரது தந்தை ராஜசேகர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை போலீசார் தேடிவந்த நிலையில் திண்டிவனம் அருகே பதுங்கி இருந்த குமரேஸ்வரன், அவரது தந்தை ராஜசேகரன் ஆகிய 2 பேரையும் மடக்கி பிடித்தனர். மேலும் கடத்தப்பட்ட மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து மாணவியை கடத்தி சென்ற குமரேஸ்வரன் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை ராஜசேகர் ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் கைது செய்து கடலூர் ஜெயிலில் அடைத்தனர்.

மாணவியை கடத்திய குமரேஸ்வரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News