செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

வெளிநாடு புறப்பட்டார் தமிழக முதல்வர்- தொழில் முதலீட்டை ஈர்க்க 14 நாட்கள் சுற்றுப்பயணம்

Published On 2019-08-28 05:24 GMT   |   Update On 2019-08-28 06:52 GMT
தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். மொத்தம் 14 நாட்கள் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சென்னை:

தொழில்துறையில் தமிழகத்தை முன்னேற்ற மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முக்கிய அம்சமாக வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டது.

இதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதி வரை 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அந்த நாடுகளின் தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார்.

இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் இருந்து விமானத்தில் வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அவரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

முன்னதாக விமான நிலையத்தில் முதலமைச்சர் அளித்த பேட்டியில், வெளிநாடுகளுக்கு சென்று, பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யும்படி அழைப்பு விடுக்க உள்ளதாகவும், சுற்றுப்பயணம் முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதும் எவ்வளவு முதலீடு வரும் என்பதை விளக்கமாக தெரிவிப்பதாகவும் கூறினார்.

சென்னையில் இருந்து இன்று பிற்பகல் துபாய் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து பிற்பகல் லண்டனுக்கு விமானம் மூலம் புறப்படுகிறார். இந்த விமானம் லண்டனை மாலை 6.40 மணிக்கு சென்றடைகிறது.

லண்டனில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணித்தர மேம்பாடுகள் தொடர்பாக சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆஸ்பத்திரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுகிறார். இங்கிலாந்தின் அவசர ஆம்புலன்ஸ் சேவை மற்றும் சக்போல்க் நகரில் உள்ள ‘ஐ.பி. சுவிட்ச் ஸ்மார்ட் கிரிட்’ நிறுவனத்தை பார்வையிடுகிறார். அந்நாட்டு எம்.பி.க்களையும் சந்தித்து பேசுகிறார். இந்துஜா உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் அதிபர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

லண்டன் பயணம் முடிந்து செப்டம்பர் 1ம் தேதி அமெரிக்காவிற்கு செல்லும் எடப்பாடி பழனிசாமி, அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு துபாய் சென்று அங்கிருந்து 9-ம் தேதி புறப்பட்டு 10-ம் தேதி சென்னை வந்தடைகிறார்.

இந்த பயணத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அவருடைய தனி செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர்.
Tags:    

Similar News