செய்திகள்
பள்ளிக்கல்வி துறை

2,449 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அனுமதி - பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

Published On 2019-08-27 22:10 GMT   |   Update On 2019-08-27 22:10 GMT
மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்துடன் 2,449 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப பள்ளிக்கல்வி துறை அனுமதி அளித்து உள்ளது.
சென்னை:

பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் படித்து அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலன் கருதி அவர்களை பொதுத்தேர்வுக்கு முழுமையாக தயார்படுத்துவதற்கு ஏதுவாகவும், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கருதியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களில் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டி இருக்கிறது.

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய 11 பாடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக 2,449 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதிபெற்ற நபர்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக நிரப்ப வேண்டும்.

அவ்வாறு தேர்வு செய்யப்படும் போது, அந்த நபரிடம் இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை தெரிவித்துவிட வேண்டும். இவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டும், பதவி உயர்வு மூலமும் நிரப்பப்படும் வரை, டிசம்பர் 2019 வரை ஒப்பந்த அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது.

மேற்கண்ட மாதத்துக்குள் பதவி உயர்வு மூலமாகவோ அல்லது நேரடி நியமனம் மூலமாகவோ அல்லது மாறுதல் மூலமாகவோ அந்த பணியிடம் நிரப்பப்பட்டால் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணி விடுவிப்பு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2018-19-ம் கல்வியாண்டு) இதேபோல் தொகுப்பூதியம் அடிப்படையில் 1,474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News