செய்திகள்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆவணங்கள் தாக்கல்

Published On 2019-08-27 08:28 GMT   |   Update On 2019-08-27 08:28 GMT
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை ஆவணங்களை அரசு தாக்கல் செய்துள்ளது.
மதுரை:

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனது பதவியை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் மீதான புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால் விசாரணை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.



அதன்பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி, அமைச்சரின் வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விவரங்களுடன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்படாததால், சொத்துக்குவிப்பு வழக்கின் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு பொதுத்துறை செயலர் தரப்பில் விசாரணை தொடர்பான ஆவணங்கள் சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து வழக்கின் விசாரணையை செப்டம்பர் 25-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News