செய்திகள்
பெண் கைது

ராமநாதபுரம் அருகே வீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா?

Published On 2019-08-25 11:33 GMT   |   Update On 2019-08-25 11:33 GMT
ராமநாதபுரம் அருகே வீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்:

தமிழகத்தில் தாக்குதல் நடத்தும் திட்டத்தோடு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 6 பேர் மாறு வேடத்தில் ஊடுருவி உள்ளதாகவும், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய உளவுத்துறையினர் தமிழக போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் பயங்கரவாதிகள் இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் கடல் பகுதி வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து இருக்கலாம் என்றும் உளவுத்துறை எச்சரித்தது.

இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

ராமேசுவரம் கடலோர பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் உள்ளதா? என்று கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இரவு, பகலாக கடந்த 2 நாட்களாக தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசர் 3-வது நாளான இன்றும் தங்கள் சோதனையை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசை பிள்ளையார்கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமாருக்கு தகவல் கிடைத்தது.

அவர் உடனடியாக இதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர். வீட்டில் வள்ளி என்ற பெண் மட்டுமே இருந்தார். அவர் தையல் தொழில் செய்து வந்தார்.

அவரது நடவடிக்கையை நோட்ட மிட்ட போலீசார் திடீரென அதிரடியாக வீட்டுக்குள் சென்றனர். போலீசாரை கண்டதும் வள்ளி அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து வீட்டை சோதனையிட்ட போது அங்கு கை துப்பாக்கி (ரிவால்வர்) பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் வள்ளியை கைது செய்தனர்.

வள்ளிக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி? அவர் எதற்காக துப்பாக்கியை பதுக்கி வைத்து இருந்தார்? என்பது மர்மமாக உள்ளது. அவரது கணவர் லோகநாதன் (வயது42) கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்களுக்கும், பயங்கரவாத கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாமா? கணவன்-மனைவி இருவரும் பயங்கரவாதிகளுக்கு உதவினார்களா? அல்லது பணத்துக்கு ஆசைப்பட்டு யாரிடமாவது துப்பாக்கியை வாங்கி பதுக்கி வைத்துள்ளார்களா? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையை போலீசார் மிகவும் ரகசியமாக செய்து வருகின்றனர்.

பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ள நேரத்தில் துப்பாக்கியுடன் பெண் கைதான சம்பவம் ராமநாதபுரத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News