செய்திகள்
பெண்கள் மட்டும் தேர்வு எழுதுவதற்கு வசதியாக தனி மையம்

9 ஆயிரம் பணியிடத்துக்கு போலீஸ் வேலைக்கு 3¼ லட்சம் பேர் எழுத்து தேர்வு

Published On 2019-08-25 09:19 GMT   |   Update On 2019-08-25 11:06 GMT
தமிழ்நாட்டில் போலீஸ், தீயணைப்பு துறை, மற்றும் சிறை துறை காவலர்களுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.

சென்னை:

தமிழ்நாட்டில் போலீஸ், தீயணைப்பு துறை, மற்றும் சிறை துறை காவலர்களுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. 8 ஆயிரத்து 888 காலி பணியிடங்களில் 250 பணியிடங்களுக்கு தீயணைப்பு வீரர்களும், சிறைதுறை வார்டன்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. கல்வி தகுதி 10-ம் வகுப்பு என்ற போதிலும் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் என லட்கக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்தனர்.

இவர்களில் 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் தேர்வு எழுத தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு இன்று எழுத்து தேர்வு நடந்தது.

இதற்காக 32 மாவட்ட தலை நகரங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சீருடைப் பணியாளர்கள் தேர்வாணைய கூடுதல் டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் மேற்பார்வையில் 228 கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

சென்னையில் மட்டும் 13 மையங்களில் 19,990 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. பலத்த சோதனைக்கு பிறகே தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

காலை 10 மணி முதல் 11.20 மணி வரை 80 நிமிடங்கள் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 80 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடந்தது. அதில் 50 மதிப்பெண்கள் பொது அறிவுக்கும் மற்றும் 30 மதிப்பெண் உளவியலுக்கும் வழங்கப்படுகின்றன.

கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் பெண்கள் மட்டும் தேர்வு எழுதுவதற்கு வசதியாக தனி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு மையத்தில் இன்று காலையில் ஏராளமான பெண்கள் குவிந்திருந்தனர்.

கர்ப்பிணிப் பெண்களும் போலீஸ் வேலையில் சேர்வதற்கு அதிக ஆர்வம் காட்டினர்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பல பெண்கள் கை நிறைய வளையல்களுடன் தேர்வு மையத்துக்கு கடைசி நேரத்தில் ஓட முடியாமல் மூச்சிறைக்க ஓடினார்கள். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி ஓடாமல் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தினர். இதுபோன்று நேரம் கடந்த நிலையிலும் வந்த பல பெண்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்கள் மட்டுமல்லாமல் பட்டதாரிகள் என்ஜினீயர்கள் உள்ளிட்ட பலரும் இன்றைய எழுத்து தேர்வுக்கு வந்திருந்தனர்.

தேர்வு மையங்கள் முன்பு காலை 6 மணியில் இருந்தே இளைஞர்கள் திரண்டிருந்தனர். அவர்களை ஒழுங்குபடுத்தி போலீசார் உள்ளே அனுப்பி வைத்தனர்.

காப்பி அடிப்பதை தடுப்பதற்கும் தேர்வு மையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேர்வு எழுத இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் தேர்வு நடைபெற்றது. டி.ஐ.ஜி.க்கள் தேர்வு மையங்களை கண் காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக உடல் தகுதி தேர்வு நடைபெறும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அனுமதிக்க படுவார்கள்.

கயிறு ஏறுதல், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படும். மார்பு அளவு, உயரம் ஆகியற்றையும் கணக்கிட்டு உடல் தகுதி தேர்வில் ஆட்களை தேர்வு செய்வார்கள். இந்த இரண்டிலும் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்படும்.

வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் 2 மாதத்தில் போலீஸ் இணைய தளத்தில் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 6 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Tags:    

Similar News