செய்திகள்
சேலம் அத்வைத ஆசிரம ரோட்டில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சி.

சேலம் மாவட்டத்தில் 7வது நாளாக மழை - வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

Published On 2019-08-24 08:18 GMT   |   Update On 2019-08-24 08:18 GMT
சேலம் மாநகரில் 7-வது நாளாக நேற்றிரவு கனமழை பெய்தது. நவப்பட்டி ஊராட்சி கீழ் காலனியிலும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
சேலம்:

சேலம் மாநகரில் 7-வது நாளாக நேற்றிரவு கனமழை பெய்தது.

அஸ்தம்பட்டி, ஜங்சன், அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டி, 5 ரோடு உள்பட பல பகுதிகளில் மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாக கொட்டியது. மேலும் நள்ளிரவு வரை மழை தூறலாக நீடித்தது.

இதனால் சேலம் அத்வைத ஆசிரம ரோடு, சந்தைப்பேட்டை, அம்மாப்பேட்டை, 5 ரோடு உள்பட பல பகுதிகளில் சாக்கடை நீருடன் மழை நீரும் சேர்ந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் இரு சக்கர வாகன ஓட்டியதால் கடும் அவதி அடைந்தனர்.

இதே போல புறநகர் பகுதிகளான மேட்டூர், ஏற்காடு, காடையாம்பட்டி, ஓமலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதில் மேட்டூர் கிழக்கு, மேற்கு நெடுஞ்சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேற்கு நெடுஞ்சாலையில் பொதுப்பணித்துறை குடியிருப்பில் வெள்ளம் புகுந்தது.

நவப்பட்டி ஊராட்சி கீழ் காலனியிலும் தண்ணீர் புகுந்தது. இந்த பகுதிகளில் மழை நீர் வடிகால் இல்லாததால் குட்டை போல தேங்கி காட்சி அளித்தது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

ஏற்காட்டில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை 8 மணி வரை கன மழையாக நீடித்தது. தொடர் மழை பெய்து வருவதால் ஏற்காடு மலைப்பாதையில் திடீர் அருவிகள் உருவாகி அதில் தண்ணீர் கொட்டுகிறது.

இதனை பார்த்த சுற்றுலா பயணிகள் அதில் ஆனந்தமாக குளித்து வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழையால் ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

மேட்டூரில் அதிகபட்சமாக 60.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஏற்காடு 42, காடையாம்பட்டி 41, ஓமலூர் 30, சேலம் 15.2, சங்ககிரி 17, வாழப்பாடி 8, ஆனைமடுவு 7, பெத்தநாயக்கன்பாளையம் 5.4, கரியகோவில் 3, தம்மம்பட்டி 2.4, ஆத்தூர் 1.6, எடப்பாடியில் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 234 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்றும் காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் ரம்மியமான சூழல் நிலவியது.



Tags:    

Similar News