செய்திகள்
பெருமாள்

கிழக்கு கடற்கரை சாலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில்

Published On 2019-08-24 07:52 GMT   |   Update On 2019-08-24 07:52 GMT
சென்னையில் திருப்பதி கோவில் கட்ட கிழக்கு கடற்கரை சாலையில் நிலம் வழங்க அரசு ஒத்துக்கொண்டுள்ளது. தேவஸ்தான அதிகாரிகள் ஆந்திர முதல்-மந்திரியிடம் இதுபற்றி விவாதிக்க உள்ளனர்.
சென்னை:

சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்கிறார்கள்.

தமிழக பக்தர்களின் சிரமத்தை தவிர்க்க தமிழகத்திலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலை தேவஸ்தானம் கட்ட திட்டமிட்டது. ஏற்கனவே கன்னியாகுமரியில் ரூ.25 கோடி செலவில் திருப்பதி கோவில் கட்டப்பட்டுள்ளது.

சென்னையிலும் திருப்பதி கோவில் கட்ட கடந்த 15 ஆண்டுகளாக திருப்பதி தேவஸ்தானம் முயற்சித்து வருகிறது. ஆனால் இடம் கிடைப்பதுதான் பிரச்சினையாக உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இடம் வழங்க உறுதி அளித்து இருந்தார். ஆனால் முடியாமல் போனது. இப்போது மீண்டும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

கன்னியாகுமரியை போல் சென்னையிலும் கோவில் கட்ட குறைந்தது 5 ஏக்கர் நிலம் தேவை என்பதை முதல்-அமைச்சரிடம் தெரிவித்தனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் நிலம் வழங்க அரசு ஒத்துக்கொண்டுள்ளது. தேவஸ்தான அதிகாரிகள் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியிடம் இதுபற்றி விவாதிக்க உள்ளனர். அதன்பிறகு இரு மாநில அரசுகளும் பேசி முடிவு செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News