செய்திகள்
ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2019-08-24 03:30 GMT   |   Update On 2019-08-24 03:30 GMT
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறக்கும் படை அதிகாரிகளும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டுச் செல்லும் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்பட இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும்படை தாசில்தார் சதானந்தன் தலைமையில், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் உள்ளிட்டோரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் நேற்று காலை 9.30 மணி அளவில் திருவனந்தபுரம் செல்ல இருந்த ரெயிலில் சோதனை நடத்தினர். அப்போது அந்த ரெயிலின் பெட்டிகள் சிலவற்றில் சிறு, சிறு பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளாக 30-க்கும் மேற்பட்ட சாக்குமூட்டைகள் கேட்பாரற்று அனாதையாக கிடந்தன. அவற்றை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவற்றில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அரிசி மூட்டைகளுக்கு யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. இதனால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த மூட்டைகளில் மொத்தம் ஒரு டன் ரேஷன் அரிசி இருந்தது.

யாரோ மர்ம நபர்கள் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரேஷன் அரிசியை கடத்த திட்டமிட்டு இந்த மூட்டைகளை ரெயிலில் ஏற்றியுள்ளனர். அதிகாரிகளைப் பார்த்ததும் அந்த நபர் பதுங்கிக் கொண்டார். இதனால் அந்த அரிசியை கடத்தியது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகளை அதிகாரிகள் வேனில் ஏற்றி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவற்றை நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடத்திய இந்த திடீர் சோதனை பயணிகளிடையே திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News