செய்திகள்
தியாகராயநகர் ரெங்கநாதன் தெருவில் மீண்டும் தலை தூக்கியிருக்கும் ஆக்கிரமிப்புகளால் ஏற்பட்டுள்ள நெரிசல்.

சென்னை ரெங்கநாதன் தெருவில் மீண்டும் ஆக்கிரமிப்பு

Published On 2019-08-23 10:11 GMT   |   Update On 2019-08-23 10:11 GMT
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சென்னை ரெங்கநாதன் தெருவில் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

சென்னை:

சென்னையில் மிகப் பெரிய வணிகப் பகுதியாக விளங்குவது தியாகராய நகர் ரெங்கநாதன் தெரு. பண்டிகை காலங்களில் ஜவுளிகள் மற்றும் பொருட்கள் வாங்க வாடிக்கையாளர் கூட்டம் அலை மோதும். கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறுவது உண்டு.

பெரும்பாலான கடைகளில் ஆபத்து காலங்களில் எளிதாக வெளியேற வழிகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் எதுவும் கிடையாது.

கோர்ட்டு உத்தரவின்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த தெருவில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதன் பிறகு ரெங்கநாதன் தெரு ஓரளவு விசாலமாக காட்சியளித்தது. மக்கள் நடமாட வசதியாக இருந்தது.

இந்த நிலையில் மீண்டும் ரெங்கநாதன் தெரு கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.

சிறு சிறு கடைகள் நடுத் தெரு வரை கூடாரம் போட்டு கடையை விரிவாக அமைத்துள்ளன. இதனால் தெரு அகலம் சுருங்கி வருகிறது. அந்த பகுதி பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் கண்டு கொள்ளாதது பொதுமக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை வருகிறது. அடுத்த மாதமே பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதும் நெரிசலில் சிக்கி ரெங்கநாதன் தெரு விழி பிதுங்கும். அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாரிமுனை பூக்கடை பகுதியிலும் ரோட்டோர கடைகள் அகற்றப்பட்டன. அந்த இடங்கள் வாகன நிறுத்துமிடம் மற்றும் நடை பாதை கடைகளாக மாறி விட்டன. நடந்து செல்லும் பாத சாரிகள்தான் படாத பாடு படுகிறார்கள்.

நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாட்டை செய்து நடைபாதை நடப்பதற்கே என்பதை உறுதிப்படுத்தினால் நல்லது.

Tags:    

Similar News