செய்திகள்
புதுவை சட்டசபை

புதுவை சட்டசபை கூட்டத்தொடர் 26-ந்தேதி கூடுகிறது

Published On 2019-08-22 17:22 GMT   |   Update On 2019-08-22 17:22 GMT
புதுவை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 26-ந் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இதில் கவர்னர் கிரண்பேடி உரையாற்றுகிறார்.
புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
நடப்பாண்டு பாராளுமன்ற தேர்தல் குறுக்கிட்டதால் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக மார்ச் மாதம் கூடிய சட்டமன்றத்தில் 5 மாத அரசு செலவினங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 703 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து கடந்த ஜுன் 3-ந்தேதி மீண்டும் சட்டசபை கூடியது. அப்போது புதிய சபாநாயகராக சிவக்கொழுந்து பதவி யேற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் கூட்டம் முடிவடைந்தது. 

கடந்த மாதம் 22, 23-ந் தேதி சிறப்பு சட்டமன்றம் கூடியது. இந்த கூட்டத்தில் ஹைட்ரோகார்பன், இந்தி திணிப்பு, கல்வி கொள்கை ஆகியவற்றுக்கு மத்திய அரசுக்கு எதிர்ப்பு  தெரிவித்தும், நிலத்தடி நீர் மேலாண்மைக்கு நிதி கோரியும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. 

கிரண்பேடி தலைமையில் கூடிய மத்திய திட்டக்குழு கூட்டத்தில் நடப்பாண்டு பட்ஜெட் தொகையாக ரூ.8 ஆயிரத்து 425 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு ஒப்புதல் கோரி மத்திய உள்துறைக்கு கோப்பு அனுப்பப்பட்டது. நிதித்துறை ஒப்புதல் அளித்தும் உள்துறை ஒப்புதல் அளிக்கப்படாமல் இருந்தது. இதனால் சட்டமன்றம் கூடுவது காலதாமதமாகி வந்தது. 

இந்நிலையில் உள்துறை பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து புதுவை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 26-ந் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் கிரண்பேடி உரையாற்றி சட்டசபை கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார். 

28-ந்தேதி நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்ட சபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். எத்தனை நாட்கள் சபையை நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்ய உள்ளது.          
Tags:    

Similar News