செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

ப.சிதம்பரம் கைது தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலைகுனிவு - தமிழிசை

Published On 2019-08-22 05:38 GMT   |   Update On 2019-08-22 05:38 GMT
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலைகுனிவு என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
திருச்சி:

தஞ்சையில் நடைபெறும் பா.ஜ.க. பயிற்சிப்பட்டறை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிதம்பரம் நேற்று கைது செய்யப்பட்டு இருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து நிதியமைச்சராக இருந்த ஒரு அரசியல்வாதி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருப்பது தமிழ்நாட்டிற்கு ஒரு தலைகுனிவு என்று தான் சொல்ல வேண்டும்.

வேட்டி கட்டிய தமிழர்கள் டெல்லியில் கோலோச்சிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். காமராஜர் போன்ற தூய்மையான அரசியல்வாதிகளை பார்த்த நாம், இன்று வேட்டி கட்டிய ஒரு தமிழராக சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

அது மட்டுமல்லாமல் இந்த வழக்கை அவர் எதிர்கொண்ட விதம் உண்மையிலேயே மோசமான முன்னுதாரணம். காலையிலேயே சம்மன் வந்த உடனேயே விசாரணைக்கு ஆஜராகி இருக்கலாம். 27 மணி நேரம் அவர் தலைமறைவாக இருந்து இருக்கிறார். அதன் பிறகு நான் எங்கே தலைமறைவாக இருந்தேன் என்கிறார். போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறை வாகிவிட்டார்.

சில மணி நேரத்திற்குள் வீட்டிற்கு வர வேண்டும் என்று சொல்லி அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் நோட்டீஸ் கொடுத்த பின்பும் வராமல் இருந்து கொண்டு மிக சாதாரணமாக இதை கையாண்டு விட்டார். அவர் ஏதாவது அதிகாரிகளைச் சந்தித்து இருக்க வேண்டும்.

ஆனால் வீட்டை பூட்டி கொண்டிருப்பது சரியல்ல. இதுபோன்ற தவறான முன்னுதாரணத்தை காட்டியிருக்கிறார் என்பது எனது கருத்து. இது பழிவாங்கும் நடவடிக்கை என்று பரிவர்த்தனையில் பங்கு கொண்ட இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறி இருக்கிறார். அவரிடம் இருந்து பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்று சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது. அதன் மீதுதான் விசாரணை என்று கூறியிருக்கிறார்கள்.

நோட்டீஸ் ஒட்டியது, சுவர் ஏறிக்குதித்து கைது செய்தது என 2 மணி நேரத்தில் இவை நடக்க சி.பி.ஐ. மட்டும் காரணமல்ல. இதற்கு காரணம் சிதம்பரம் மட்டுமே. அவர் இதை எப்படி எதிர் கொள்ள வேண்டுமோ அப்படி எதிர் கொண்டு இருக்க வேண்டும்.



சம்மனுக்கு மதிப்பு இல்லை என்று நினைத்துக் கொண்டு வீட்டை பூட்டிக்கொண்டு இருந்துள்ளார். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என நினைத்துவிட்டார். உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்திருக்கிறது. நாளையோ அல்லது நாளை மறுநாளோ உச்ச நீதிமன்றத்தில் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ நிலை ஏற்படலாம். ஆனால் நான் மேல்முறையீடு செய்து விட்டேன் எனவே என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று இருந்துவிட்டார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றிருக்கிறது. ஆனால் கார்த்தி சிதம்பரம் கூறும்போது இது பழி வாங்கும் நடவடிக்கை, குறி வைத்துத்தாக்குகிறார்கள் என்று கூறுகிறார்.

நேர்மையாளர்களாக இருந்தால் விசாரணையை எதிர்கொண்டிருக்க வேண்டும். இத்தனைக்கும் காரணம் சிதம்பரம் மட்டுமே. பொருளாதார சீர்திருத்தம் மந்த நிலை இருப்பதாக கூறுவது தவறு. நாட்டின் மீது அக்கறை கொண்ட ஒரு சிறந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் நடத்தும் ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை. இது அவரது வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளியாக அமையும். நாட்டின் ஒற்றுமையை எதிர்த்து காஷ்மீர் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை தடுத்து போராடுகிறார்கள்.

சமூக நீதி பற்றி பேசுபவர்கள் அதற்கு எதிராக போராடுகிறாரகள். காஷ்மீர் சிறுபான்மை இன மக்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்க வேண்டுமோ அவை அனைத்தும் இப்போதுதான் கிடைக்கும். ஆனால் அதையெல்லாம் எதிர்த்து என்ன காரணங்களுக்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. அங்கு ஓட்டு வங்கிக்காக செய்தாலும் அந்த மக்கள் இவர்களை ஆதரிக்கப்போவதில்லை.

எப்படி ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து ஸ்டாலின் ஒரு தலைகுனிவை கற்றுக் கொண்டாரோ, அதே போன்றுதான் இந்த ஆர்ப்பாட்டம் அவருக்கு ஒரு தலைகுனிவை ஏற்படுத்தும். தமிழக பா.ஜ.க. தலைவர் தேர்தலில் போட்டி என்று எதுவுமில்லை. மண்டல அளவில் கிளை தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு பிறகு தலைவர் தேர்வு செய்யப்படுவார். அதை கட்சி தலைமைதான் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News