செய்திகள்
போதை ஊசி மருந்து மற்றும் கைதான வாலிபர் ராஜா.

கூடலூர் அருகே வலி நிவாரணியை போதை ஊசியாக பயன்படுத்திய வாலிபர் கைது

Published On 2019-08-22 05:27 GMT   |   Update On 2019-08-22 05:27 GMT
கூடலூர் அருகே வலி நிவாரணியை போதை மருந்தாக பயன்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர்:

தமிழக - கேரள எல்லைப்பகுதியான குமுளியில் உள்ள சுங்கச்சாவடியில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது தமிழக பகுதியில் இருந்து வந்த ஒரு வாலிபரை நிறுத்தி விசாரித்தனர்.

அவர் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரது சட்டைப்பை மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளில் சோதனை நடத்தினர். இதில் வலி நிவாரணி ஊசி மருந்தை போதை மருந்தாக பயன்படுத்துவதற்கு மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்த கங்கா மகன் ராஜா (வயது 26) என்ற அந்த வாலிபர் போதைக்கு அடிமையானவர் என தெரிந்தது. அவர் வைத்திருந்த மருந்தில் தமிழ்நாடு அரசு முத்திரையுடன் விற்பனைக்கு அல்ல என்று அச்சிடப்பட்டு இருந்தது.

இது அபினில் இருந்து எடுக்கப்படும் ஊசி மருந்தாகும். அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் தீராத உடல் வலி உள்ளவர்களுக்கும் இது வலி நிவாரணியாக கொடுக்கப்படும். இந்த மருந்து அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் உள்ளது.

இதனை போட்டுக் கொண்டால் நன்றாக தூக்கம் வரும். தூங்காமல் இருந்தால் போதையில் இருப்பது போன்ற உணர்வு இருக்கும். பெத்தடின் மருந்து தடை செய்யப்பட்டுள்ளதால் தற்போது இந்த மருந்தை போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல்தான் ராஜாவும் இதனை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரை கைது செய்த போலீசார் இந்த மருந்தை அவர் எங்கிருந்து வாங்கினார்? மேலும் வேறு யாருக்காவது இதனை பயன்படுத்த கொடுத்துள்ளாரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News